Freitag, 30. Oktober 2015

ருசிகண்ட பூனையும் சுவிற்சர்லாந்து தமிழர் நலன்புரி சங்கம் சொலத்தூண் (Tamil Welfare Association Solothurn)

புலிகள் கொடிகட்டி பறந்த நாட்களில் புலம்பெயர் நாடுகளில் எந்த வொரு சுயாதின அமைப்புகளையும் விட்டுவைக்கவில்லை. கோயில்கள் பத்திரிகைகள் கலை கலாச்சார மற்றும் விளையாட்டுதுறை எதனையும் விட்டுவைக்காது தமது பினாமி அமைப்பாக்கி தன்னகப்படுத்தி கொண்டனர். இவ்வமைப்புகளினால் சேகரிக்கப்படும் அனைத்து நிதியினையும் போராட்ட நிதியென அபகரித்து கொண்டனர். மேலும் ஓர் படி மேலாக தமது பினாமிகளை கொண்டு பல நிறுவனங்களையும் முதலீட்டு நிறுவனங்களையம் நடாத்திவந்தனர். இவ்விடயங்களை புலம்பெயர் வாழும் எந்த தமிழரும் நன்கு அறிவர்.

முள்ளிவாய்காலிற்குள் போரட்டம் முடக்கப்பட்டபின்னர் பல பினாமிகள் நிறுவனங்களை தமேக்கே சொந்தமாக்கி கொண்டனர். சேகரித்த பெரும்தொகை தனிநபர்களிடமே சொந்தமான பல ஆதாரங்களும் உள்ளன. இவ்வகையில் பொது அமைப்பினால் பெறப்பட்ட பெருந்தொகை நிதியில் தங்கி இருந்த புலத்து புலிகள். இன்றும் இந்நிறுவனங்களை தனித்து இயங்கவிடமால் இன்றும் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து தமது பினாமிகளை கொண்டு வருமானங்களை கபழிகரம் செய்ய பல குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றனர்.

இவற்றுக்கு சான்று பகிரும் வகையில் கடந்த செப்ரம்பர் மாதம் சுவிற்சர்லாந்து நலன்புரி சங்கம் Solothurn ஓர் பொது குழுவினை ஏற்பாடு செய்திருந்தது. சங்த்தினை ஓர் சுயாதினகரமான அமைப்பைமாற்றுவதற்கான அடிப்படையில் சந்திப்பிற்கான அழைப்பு விடுவிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது விடுதலைப்புலிகளின் சுவிற்சர்லாந்து கிளையில் செயற்பட்டு வருபவர்கள் ஓருசிலரும் இன்னும் பல ஆதரவாளர்களும் இணைந்து தமக்கு கீழ் அணிதிரளுங்கள் நாம் ஓர் புதிய நிர்வாகத்தினை நிறுவுவோம் என கோரிக்கை விடுத்திருந்தது. சந்திப்பிற்கான அழைப்பை விடுத்திருந்த பெரும்பான்மையான பழைய நிர்வாக சபை உறுப்பினர்களும் இவர்களை ஆதரிப்போரும் மற்றும் இச்சங்கத்தினை புலிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுப்பிக்க விரும்பியோர்களும் தனியே சந்திப்பினை ஓரே மண்டபத்தில் மேற்கொண்டனர். இதன் போது இருதரப்பினர்களாலும் வாக்குவாதங்கள்  இடம்பெற்ற மண்டபத்தினையே அதிரவைத்தது. பாதுகாவலிற்காக தனியார் பாதுகாப்பு சேவையாளர்களும் ஒன்றுகுவிக்கபட்டிருந்தனர். இதன் போது இரண்டு தரப்பினரும் இரண்டு புதிய செயற்குழுவினை தெரிவுசெய்தனர்.

சுயாதீனத்தினை விரும்புவர்கள் தமது சங்கத்தின் யாப்பிற்கு இணங்க தமது சங்த்தினை பதிவு செய்து கொண்டனர். இதனை கேள்விப்பட்ட மற்றைய தரப்பினரும் அதே சங்கத்தினை தமிழ் பெயரில் பதிந்துகொண்டனர். ஏன் இந்த சங்கத்தின் மேல் இவ்வளவு கரிசனை என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். நலன்புரி சங்கத்தினரே கடந்தகாலங்களில் பாரிய போட்டி சுவிற்சர்லாந்து தழுவிய நிகழ்ச்சியான நாட்டிய மயில் இசைக்குயில் போன்ற நிகழ்ச்சியை நடாத்தி வந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கிடைத்த அனைத்து வருமானங்களும் புலத்து புலிகளின் வேலைத்திட்டங்களிற்காக கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

இச்சங்கம் சுயாதீனமாக செயற்பட்டால் இவ்வகையான நிகழ்ச்சி மூலமாக கிடைக்கப்படும் பணத்தினை சங்கமே நிர்வகிக்கும் தமது கயான காலியாகிவிடும் என்ற உள்நோக்கமே இவ்வகையில் சங்கத்தின் பதிவிற்கு எதிரான எதிர்பதிவினை செய்து சுயாதீனமானவர்களை செயற்படவிடாமல் தடுக்கம் நடவடிக்கையாகும்.

சுவிற்சர்லாந்தில் இயங்கிவந்த புலிகள் கடந்த இறுதியுத்தத்தின் போது ஓவ்வொரு தமிழர்களிடம் இருந்து ஓரு இலட்சம் சுவிஶ் பிராங்குகளை சேகரித்தனர். யுத்த முடிவிற்கு பின்னர் தாம்  வாங்கிய ஓரு இலட்சம் வங்கி கடனை அடைக்கமுடியாது பல தமிழர்கள் இன்னலுக்கு உள்ளனர்.
யுத்த முடிவிற்கு பின்னர் பணத்தினை திருப்பி கொடுக்குமாறு புலி அமைப்பாளர்களிடம் கோரியிருந்தனர்.

ஆனால் புலி அமைப்பாளர்கள் நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்பட்ட நாட்டியமயில் அல்லது இசைக்குயில் வருமானத்தினை பெற்று கடனை அடைப்பதாக பிரச்சாரப்படுத்தி கொண்டு தமது தனிப்பட்ட அனுதாபிகளிற்கு மட்டும் பணத்தினை திருப்பி கொடுத்தனர். சமமான முறையில் பாதிக்கப்பட்ட முறையில் பகிர்ந்தளிக்க படவில்லை.

இச்சம்பவங்களினால் அதிருப்தி அடைந்ததின் விளைவாகவே பெரம்பான்மையான உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்ற அவசியத்தின் வெளிப்பாடே பொது குழுவின் சந்திப்பு நடைபெற்றது.

சுயாதீனத்தினை விரும்புவோர்  29.09.2015 அன்று Tamil Welfare Association Solothurn. எனபதிவு செய்து கொண்டனர்.  புலத்து புலிகளின் ஆதரவோடு பதிவு செய்யப்பட்ட சங்கம் Tamilar (ரமிலர்) Nalanpuri Association Solothurn என 13.10.2015 அன்று பதிவு செய்துள்ளனர். சங்கத்தின் நோக்கமும் ஈ அடிச்சான் கொப்பி போல் அதே வசனத்துடன் எழுதப்பட்டுள்ளது.

இன்று தமது அமைப்புக்களை அரசியல் கட்சி சார்பற்ற சுயாதீன அமைப்பாக வைத்து கொள்ளவே  பெரும்பாண்மையானவர்கள் விரும்புகின்றனர்.

இனிமேலும் எவ்வித வேலைத்திட்டங்கள் அற்று செயற்படும் புலி அமைப்பினரை மக்கள் நிரகரிக்கவேண்டும். இவர்களின் முக்கிய நோக்கம் பணம் சேகரப்பது மட்டுமே. புலத்தில் உள்ள புலிகளினால் முடக்கப்பட்ட பெரும் தொகையான பணம் யுத்ததினால் வாழ்வாதரங்ஙகளை இழந்த மக்களிற்கும் மேலும் பாதிக்கப்பட்ட அல்லது அங்கவீனமுற்ற போரளிகளிற்கு உதவுவதற்கு போதுமானது. ஆனால் கசப்பான உண்மையாதெனில் எந்த ஓரு புலம் பெயர் நாட்டிலும் செயற்பட்ட புலிகளும் தம்மால் சேகித்த அல்லது முதலீட்டால் பெறப்பட்ட வருமானங்கள் சரியான முறையில் பாதிக்கப்பட்டவர்களிற்கு கொடுக்கபடவில்லை மாறாக இப்பணங்கள் அந்தந்த நாடுகில் உறைந்த போனது.

ஆனால் மக்கள் விழிப்படைந்துவிட்டனர் அனைத்து நலன் விரும்பிகளும் புலத்து புலிகளின் இவ்வகையான சனநாயகவிரோதமான நடவடிக்கையை கண்டித்து அம்பலப்படுத்தல் வேண்டும். இரண்டு சங்க பதிவின் பத்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.


அனைத்து சங்கங்களையும் அரசியல் தலையீடு அற்று சுயாதீனமாக செயற்பட வழிவகுக்க வேண்டும்.
31.10.2015

Dienstag, 27. Oktober 2015

அனுபூதி : மழைக்கால இரவு.

அனுபூதி : மழைக்கால இரவு.: சிறுகதை: மழைக்கால இரவு. அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயி...

Sonntag, 25. Oktober 2015

மழைக்கால இரவு.

சிறுகதை: மழைக்கால இரவு.

அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிருந்தது. “க்குயிங்” “க்குயிங்” என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் காதைக் கிழித்துக் கொண்டு பறந்தன. முன்னணிக் கள முனையில் இடை விடாமல் உறுமிக் கொண்டிருந்த கனரக ஆயுதங்களின் வீரியம் கூடிய ரவைகள் திடீர் திடீரென பக்கத்திலுள்ள பூவரசு வேலிகளையும் பனை மரங்களையும் பிய்த்தெறிந்தன. எறிகணைகள் விழுந்து சிதறும் இடங்களில் கிணறுகளை விடவும் வேகமாகத் தண்ணீர் குமிழி அடித்துக் கொண்டு ஊற்றெடுத்தது. பச்சை இலை குழைகள் கருகும் வாசனையும், கந்தகப் புகை மணமும், இரத்த வாடையும் சேர்ந்து வாந்தி வருமாப்பொல ஒரு கிறுதி மயக்கம் தள்ளாட்டியது.
அன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மூண்ட யுத்தம் முழு நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. உலங்கு வானூர்திகள் மாறி மாறி வந்து தாக்குதல் நடத்திக் கொண்டேயிருந்தன. போர் விமானங்களும் குண்டுகள் முடிய முடிய நிரப்பிக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருந்தன. அப்போது நேரம் நண்பகலைக் கடந்துவிட்டிருக்க வேண்டும். ஆண்டுக் கணக்காக பயிரிடப் பட்டிருக்காத பரந்த வயல் வெளி புல்லுப் பற்றையெழும்பிக் கிடந்தது. செப்பனிடப்படாமல் மெலிந்துபோய்க்கிடந்த வயல் வரம்புகளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அந்த வயல் வரம்புகளின் தேய்ந்த விளிம்புகளோடு ஒண்டியபடி எனது அணி தற்பாதுகாப்புக்காக நிலையெடுத்திருந்தது.
பெரும்பாலும் அன்றிரவு மீண்டும் எனது அணி போரின் முன்னணி களமுனைக்கு அனுப்பப்படலாம் என்ற எதிர்பார்ப்புடனிருந்தேன். எனக்கு தரப்பட்டிருந்த பதினைந்து பேர் கொண்ட அணியில் நேற்றிரவு நடந்தசண்டையில் காயமடைந்தவர்கள், மரணித்தவர்கள் போக ஆறு போ் தான் எஞ்சியிருந்தோம். வேறு அணிகளிலும் எஞ்சியவர்களை ஒன்று சேர்த்து அணிகள் மறு சீரமைக்கப்படும் வரை சிதைவுற்றிருந்த எம்மைப் போன்ற அணியினருக்கு சிறிய ஓய்வு தரப்பட்டிருந்தது.
அன்றிரவு நடந்த சண்டையில் காயமடைந்தவர்களை உடனடியாகவே பின்னணியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவ நிலைகளுக்கு அனுப்பியாகி விட்டது. மரணித்தவர்களின் உடல்கள் மட்டும் அது வரையிலும் அனுப்பப்படாமல் மழைத் தண்ணீரில் நனைந்து ஊறிப் பெருத்து உருமாறிக் கொண்டிருந்தது. அவைகள் பெற்றோர்கள் உரித்துடையோருக்கு ஒப்படைக்கப்படும்வரை மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியிருந்தது.
சங்கவி எனக்கருகில் படுத்திருந்தாள் அவள் எப்பவும் அப்படித்தான் நீட்டி நிமிர்ந்து மல்லாந்துதான் படுப்பாள். அப்படிப் படுக்கா விட்டால் நித்திரை வராது எனச் சொல்லுவாள். பொம்பிளைப் பிள்ளைகள் அப்பிடிப் படுக்கக் கூடாது என அவளின் அம்மம்மாவிடம் சின்ன வயதில் அடிக்கடி திட்டு வாங்கியிருப்பதாக சொல்லியிருக்கிறாள். ஆனாலும் அந்தப் பழக்கம் நானறிந்த வரையிலும் அவளுக்கு மாறவேயில்லை. தலை ஒரு பக்கமாக திரும்பியிருந்தது, வாயைக் கொஞ்சமாக திறந்து கொண்டு படுத்திருந்தாள். குளிருக்கு விறைச்சுப்போன ஒரு கை நெஞ்சுக்கு மேலே கிடந்தது. மற்றைய கை பக்கத்தில கிடந்தது.
ஆறெழு மாதங்களுக்குப்பின் அன்றுதான் அப்பிடி நிறைய நேரம் சங்கவி படுத்திருந்தாள். நேற்றுக் கூட சொல்லிக் கொண்டிருந்தாள், ’இந்த சண்டை முடியவிட்டு முதலில நிம்மதியா நித்திரை கொள்ளவேணும்.’ உண்மைதான், அந்த யுத்தத்தின் தயார்ப்படுத்தலுக்காக, சுமார் ஒரு வருட காலமாகவே தொடர் பயிற்சிகளும் துாக்கமில்லா இரவுகளும்தான் எங்களுக்கு வாய்த்திருந்தது.
போர் தொடங்குவதற்கு முதல்நாள் முன்னிரவுப் பொழுதில் மழை சற்று ஓய்ந்திருந்தது. கருமையான வானத் திரையில் பதிக்கப்பட்ட வைரக்கற்களாக நட்சத்திரங்களின் ஜோலிப்பு மனதைக் கொள்ளையடிப்பதாயிருந்தது. ஐயாயிரம் போராளிகள் பங்கு பற்றும் பெரும் போர் நடவடிக்கையின் கடைசி ஆயத்தங்கள் முடிந்து புறப்படுவதற்கான இறுதி தரிப்பிடங்களில் படையணிகள் நிலை கொண்டிருந்தன. தாக்குதலுக்கு உள்ளாகப் போகும் அந்த இராணுவ முகாமின் பாரிய தேடோளி விளக்குகள் ஆங்குமிங்குமாக சுழன்று சுழன்று இரவைப்பகலாக்கி தமது விழிப்பு நிலையை காண்பித்துக் கொண்டிருந்தன.
சிறிய மா மரமொன்றின் அடியில் சாய்ந்திருந்த என்னருகில் சங்கவியும் ஓய்வாக அமர்ந்திருந்தாள். மந்தகாசமான புன்னகையுடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். விரிந்த உதடுகளும், கனவு காணுமாப் போல பாதி செருகிக்கிடந்த கண்களும், அவளிதயம் விபரிக்க முடியாத உணர்வுகளுக்குள் லயித்திருப்பதை எனக்கு உணர்த்தியது. “என்னடி முழிச்சுக்கொண்டே நித்திரை அடிக்கிறியோ” எனது சீண்டல் அவளைக் குழப்பியதாக தெரியவில்லை. என்னிதயத்திலும் பொங்கியெழும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளவேண்டும் போலிருந்தாலும், அவளது அந்த இனிய மோன நிலையை குழப்பவும் மனமில்லாதிருந்தது..
ஒரு போர்ப் பயணத்திற்குரிய பரபரப்பான ஏற்பாடுகள் முடிந்து இன்னும் ஒரு சில மணித்தியாலயங்களில் புறப்படுவதற்கான பதட்டம் அனைவரின் முகங்களையும் கனமாக மூடியிருந்தது.
பலர் தாழ்ந்த குரல்களில் தம் தோழியருடன் கதைத்துக் கொண்டிருந்தனர். சிலர் பாதி நிலவு தெளித்திருந்த ஒளியில் தம் உறவுகளுக்கு இறுதியாக சொல்ல நினைக்கும் செய்திகளை கடிதங்களாக வரைந்து கொண்டிருந்தனர். இன்னும் சிலர் எல்லா சலனங்களையும் ஒத்தி வைத்து விட்டவர்கள் போல ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர்.
தன் மௌனம் கலைந்த சங்கவி எனது கையுடன் தனது விரல்களைக் கோர்த்துப் பிணைந்து கொண்டாள். எதையோ பேசுவதற்குத் தயாராகிறாள் என்பது புரிந்தது.
“இன்னும் கொஞ்ச நேரத்தில நிலைமை எப்படி மாறப்போகுது. அழகான இந்த இரவின்ர அமைதியே குலையப் போகுது, எத்தனை அம்மாக்களின்ர பத்து மாதக் கனவுகள் கலையப் போகுது நாளைக்கு எங்கட சனங்கள் விழுந்தடிச்சுக் கொண்டு பேப்பர் எடுப்பினம்”
எனக் கூறிவிட்டு மீண்டும் அமைதியாகிப் போனாள். நாங்களிருவரும் சம வயதுடையவர்கள். எமக்கு விபரம் புரியத் தொடங்கிய சிறு வயதிலிருந்தே தொண்டையை நெருக்கிக் கொண்டிருக்கின்ற யுத்தத்தின் பாடுகளுக் கூடாகவே வளர்ந்திருந்தோம். நான் வன்னியின் ஒரு கிராமத்திலும் அவள் யாழ்ப்பாணம் வடமராட்சியின் ஊரொன்றிலும் பிறந்திருந்தாலும், அமைதியான ஒரு வாழ்வு எப்படியிருக்கும் என கற்பனை பண்ணிக் கூட பாரக்கவே முடியாதளவுக்கு மலைப்பாம்பு மாதிரி எமது வாழ்வை வளைத்து இறுக்கிக் கொண்டிருந்தது நீண்டு கொண்டேயிருந்த யுத்தம்.
விறைப்பெடுக்கச் செய்த குளிரையும் மீறி பெரு மூச்சொன்று அவளிடமிருந்து சூடாக வெளியேறியது. எனக்கோ என்றால் நெஞ்சுக்குள்ளாக பாராங்கல்லொன்று அடைத்துக்கொண்டு இருப்பதைப் போல சாதாரணமாக மூச்செடுத்து விடவும் கூட கடினமாக இருந்தது. அவள் சொல்லுவதை மட்டுமே நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். படித்து பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமென்ற கனவு உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும்போதே ஊரில் நிலவிய யுத்த சூழ்நிலையில் எம்மைப் போன்ற பலருக்கும் கூட கலைந்து போயிருந்தது. ஏதாவது புதுமைசெய்யத்துடிக்கும் அந்த பதின்மப் பருவத்தில் போரிடுதல் ஒன்றுதான் எமது கனவுகளை நனவாக்கும் எனக் கருதினோம். யாழ் நகரத்தில் உள்ள பிரபல கல்லுாரியின் மாணவியான சங்கவியும் வன்னிக் கிராமத்து பள்ளியொன்றின் மாணவியான நானும் போர்ப் பயிற்சிப் பாசறையின் நண்பிகளானோம்.
எம் நினைவுகளை கலைத்தவாறு சட்டென மரக்கிளைகள் அலைப்புற இரவுப் பறவையொன்று வேகமாக எழும்பிப் பறந்து சென்றது. பொல பொலவெனச் சிதறிய தண்ணீர் துளிகள் இருவரின் தலைகளையும் நனைத்துச் சிதறியது. தண்ணீரைக் கைகளால் வழித்து எறிந்துகொண்டு உடைகளையும் இலேசாக உதறிக்கொண்டோம். தடிப்பான சீருடையையும் தாண்டி தேகம் சிலிர்த்தது
“இந்த சண்டை முடிய எல்லாருக்கும் லீவு கிடைக்கும் என பொறுப்பாளர் சொன்னவா, நான் உன்னோட வரட்டுமா? எனக்கு வன்னியில ஊருகளைப் பாக்கிற தெண்டால் சரியான விருப்பமடி. பச்சையான வயலுகளும் நெளிஞ்சு நெளிஞ்சு ஓடுகிற வாய்க்கால்களும், பென்னாம் பெரிய யானை நிக்கிற காடுகளும் அப்பப்பா என்ன இயற்கையப்பா..”
“அதுக்கென்னடியப்பா வா போவம் நான் பள்ளிக்கூடம் கொண்டு போன சைக்கிள் இப்பவும் இருக்குமெண்டு என நினைக்கிறன், இரண்டு பேரும் சுத்தித் திரியலாம், நான் படிச்ச பள்ளிக் கூடத்தைக் காட்டுறன், நானும் கூட்டாளிப் பிள்ளைகளும் தாவணி உடுத்துக் கொண்டு ஆனி உத்தரத் திருவிழா பார்க்கப் போன முருகன் கோயிலைக் காட்டுறன், அங்க போகிற பெட்டையள் கூட்டத்தைக் கண்டாலே நாதஸ்வரக்காரன் ’ராசாத்தி மனசில’ பாட்டுத்தான் வாசிப்பான் தெரியுமாடி நாங்கள் அவரை கோவத்தோட நல்லா முறைச்சுப் பாத்திட்டு வருவம்”
எனது கதையைக் கேட்டதும் பக்கென வெடித்த சிரிப்பை அடக்குவதற்காக தனது வாயை கைகளால் இறுக்கி பொத்திக்கொண்டாள் சங்கவி. மிக அருகான இராணுவதளத்திலிருந்து ஆட்லெறி எறிகணையொன்று ’கும்’ என்ற அதிர்வுடன் எழும்பி கூவிக் கொண்டு புறப்பட்ட சிலநொடிகளிலேயே தூரத்தில் வெடித்துச்சிதறும் சத்தம் கேட்டது. எத்தனை தொட்டில் குழந்தைகளின் உறக்கம் கலைந்து போனதோ என எண்ணிக் கொண்டேன்.
தலையை உலுக்கி நினைவுகளை உதற முனைந்தேன்.. அசையாமல் படுத்திருக்கும் சங்கவியின் கிராப்புத் தலை முடியினை கோதி விட வேண்டும் போலிருந்தது. இயக்கத்தில் இணைந்த ஆரம்ப நாட்களில் எல்லாமே புதியதான காலகட்டம், இறுக்கமான நாளாந்த அட்டவணையின்படி செயற்படவேண்டும். பயிற்சி முகாமில் மிகவும் துடிப்பான, கலகலப்பான போ்வழிகளான நாம் அனைவராலும் விரும்பப்பட்டவர்களாக இருந்தோம். பெரும்பாலும் ஒத்துப்போகும் இயல்புகள், ரசனைகள், வேறுபட்ட சிந்தனைபோக்கு இவைகளினால் இணைபிரியாத எமது நட்பு பொறுப்பாளர் மட்டங்களிலும் பிரசித்தமானதாகவே இருந்தது.
ஓய்வு நேங்களில் புத்தகவாசிப்பு, ஒன்று சேரும் நேரங்களில் நீளும் உரையாடல்கள், அப்பப்பா எப்பவுமே முடிவடையாதது எங்களின் சம்பாசணைகள் அவளது மூளையின் மடிப்புகளில்தான் எத்தனை கனவுகள், ஆசைகள், இலட்சியங்கள் வைத்திருந்தாள். சராசரியான விடயங்களை பேசிக் கொள்ளும் தோழிகளோடு எங்களிருவருக்கும் எப்போதுமே ஒத்துப்போவது குறைவு. எமது உரையாடல்களில் பங்கு பற்றும் தோழிகள் சற்று நேரத்தில் ’இதுகள் சரியான கழண்ட கேசுகள்’ எனும் விதமான பார்வையை வீசி விட்டு மெதுவாக இடத்தைக்காலி செய்து விடுவார்கள்.
அந்த யுத்த நடவடிக்கை சரியாக நள்ளிரவு ஒன்றறை மணிக்கு ஆரம்பிக்கப் படவிருந்தது. மிகவும் இரகசியமான சங்கேத சமிக்கைகளுடன் எமது ’முன்னரங்க தடை உடைக்கும்’ அணியும் முன்னணியில் நகர்ந்து கொண்டிருந்தது. ’உச்ச பாதுகாப்புடன் இருந்ததான அந்த இராணுவ முகாமின் முன்னணிப் பாதுகாப்பு வேலியில் காணப்படும், முள்ளுக்கம்பி சுருள்களையும், நிலக் கண்ணிகளையும், சூழ்ச்சிப் பொறிகளையும் தகர்க்கக் கூடிய டோபிடோ குண்டுகளை வெடிக்க வைத்து பாதையொன்றை ஏற்படுத்திக் கொண்டு, இராணுவ நிலைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியவாறு, உயரமான மண்அரணை வேகமாக கடந்து உள்ளுக்கு இறங்க வேண்டும்.
பின்னுக்கு வரும் தாக்குதல் அணிகள் அந்தப் பாதைக்கூடாகவே முன்னேறிச் சென்று இராணுவ தலைமையகம் உள்ளிட்ட பிரதான மையங்கள் மீது தாக்குதலை மேற் கொள்ளுவார்கள்’ இதுதான் எனது அணிக்கு தரப்பட்டிருந்த தாக்குதல் திட்டம். இதற்கான கடின பயிற்சிகளையும் சண்டைக்கான ஒத்திகையினையும் மேற் கொண்டிருந்தோம். இராணுவ தளத்தினை சுற்றி வளைத்து பல முனைகளிலும் அணிகள் இவ்வாறாக பாதைகளை உடைக்க வேண்டியிருந்தது. அந்தப் பாதைகளுக் கூடாக இராணுவ முகாமுக்குள் பெரியளவில் படையணிகள் உள் நுழைந்து தாக்குதல் நடத்துவதுதான் திட்டமாக இருந்தது. இராணுவ முகாம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும், பெறுமதியான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்படும் எனவும், இந்த நடவடிக்கையின் வெற்றிக்காக சுமார் ஐயாயிரம் போராளிகள் வரை யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும், கூறப்பட்டிருந்தது. இறுதி ஒத்திகைப் பயிற்சி முடிந்து, வரைபடத்தில் விளக்கம் தரப்பட்டு, முழுமையான ஆயுதபாணிகளாக படையணிகள் தயார்ப்படுத்தப்பட்டு, “சென்று வாருங்கள் வென்று வாருங்கள்” என வாழ்த்துக் கூறி வழி அனுப்பப் பட்டிருந்தோம். போர்க்களத்தின் சூனியப் பிரதேசத்தை அண்மித்த பகுதிவரை தாக்குதல் அணிகளை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு பின்னால் பல லொறிகளில் ஆயிரக்கணக்கான சவப்பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு கூடவே கொண்டு வரப்பட்டிருந்தன.
தாக்குதல் தொடங்கிய சற்று நேரத்திலேயே எமது அணி உள்நுழைந்து விட்டிருந்தாலும், மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அரணை கடந்து முன்னேறிச் செல்லும் முயற்சியிலே அந்த இடத்திலேயே பலர் உயிரிழக்க நேர்ந்தது. இராணுவத்தினர் கனரக ஆயதங்களின் உதவியுடன் பலமான எதிர் தாக்குதலை மேற் கொள்ளத் தொடங்கியிருந்தனர். மிகுந்த பிரயத்தனத்துடன் எனது அணி தனது பணியை முடித்திருந்த போது ஆரம்ப நகர்விலே எம்முடனிருந்த பல தோழிகள் உயிரிழந்தும், இன்னும் சிலர் படு மோசமான காயங்களையும் அடைந்திருந்தனர். எஞ்சியிருந்தவர்கள் பயங்கரமாகக் களைப்படைந்திருந்தோம்.
அந்த இராணுவ தளம் வயல் வெளி சூழ்ந்த பிரதேசமாகையால், ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதுகாப்பு நிலைகளிலிருந்து வந்த எதிர்த்தாக்குதல்களால் எமது தரப்பு அணிகள் வயல் வெளியைக் கடக்கும் முயற்சியிலேயே அடிவாங்க வேண்டியிருந்தது. தொடர்ந்து பலர் உயிரிழந்தும், காயமடைந்தும், கொண்டிருந்தனர். உயரமான காவலரணிலிருந்து மேற் கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த சினைப்பர் தாக்குதல்(குறிபார்த்துச் சுடுதல்) மிகுந்த நெருக்கடியை தந்தது. வரம்புக்கு மேலாக தலையை உயர்த்தினால் கட்டாயம் வெடி விடும் என்ற நிலைமையிலும், இராணுவ காவலரண்களை நோக்கி தாக்குல் நடத்தியவாறு எழும்பி ஓடிச் சென்றவர்கள் தலையிலும், மார்பிலும் சூடுகளை வாங்கியபடி சேற்றுத் தண்ணீர் தளம்பிக் கொண்டிருந்த வயல்களுக்குள் சரிந்து விழுந்து கொண்டேயிருப்பதை தவிர்க்க முடியாமலிருந்தது.
அப்படியிருந்தும் பல அணிகள் உள்நுழைந்து மிக நெருக்கமான நிலையில் நின்று போரிட்டனர். அருகருகாகவே இறந்தும் விழுந்தனர். சிக்கலான முள்ளுக் கம்பிச் சுருளுக்குள் ஒரு ஆண் போராளி காயத்துடன் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருந்தான், அவனை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஓடிச் சென்ற பெண் போராளி ஒருத்தி அந்த இடத்திலேயே சூடுபட்டு விழுந்தாள். பல மணி நேரமாக அந்த இடத்தை எவராலும் நெருங்கவே முடியாமலிருந்தது. அதிகமான இரத்தம் வெளியேறியதால் சற்று நேரத்தில் அவனது சடலம் அக்கம்பிச் சுருளுக்குள் அசைவில்லாமல் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.
எனது அணி மிகவும் நலிவடைந்திருந்தது. காயமடைந்தவர்களுக்கான அவசர முதழுதவிகளை வழங்கி அவர்களை ’காவும் குழுவினர்’ பின்னணி மருத்துவ நிலைகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களையும் தூக்கிக் கொண்டு பின்வாங்கும்படி எனது அணிக்கு கட்டளை கிடைத்தபோது பொழுது புலரத் தொடங்கியிருந்தது.
அன்று நண்பகல்வரையிலும் உக்கிரமாக நீடித்த சண்டை சற்று தணிவான நிலைமைக்கு சென்றிருந்தது. அப்போது களமுனையில் ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவியிருந்தது. ஓய்வில்லாதபடி குண்டுகளைச் சொறிந்து கொண்டிருந்த வானூர்திகளும் ஓய்வெடுக்கின்றன போல என நினைத்துக் கொண்டேன்.
எமது அணி ஓய்வுக்காக நிலை கொண்டிருந்த பூவரசு வேலிக் கரையினை அண்டிய சிறிய மண் பாதைக் கூடாக, முன்னணி நிலைகளில் நின்று போரிட்டு எம்மைப் போல பலமாக சிதைவுற்ற அணிகளைச் சேர்ந்தவர்கள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் எனக்கு அறிமுகமான பலரது முகங்கள் காணாமல் போயிருந்தது. அவர்கள் காயமடைந்தோ அல்லது மரணித்தோ போய்விட்டார்கள் என மனம் சொல்லிக் கொண்டது. அதேவேளை பல புதிய அணிகள் ஓட்டமும் நடையுமாக முன்னணிக்கு நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தன. கைகளிலும், கால்களிலும் உடலின் பல பாகங்களிலும் பாரிய காயங்களுடன் அலறிக் கொண்டிருந்த காயக்காரர்களையும், உயிரிழந்து கிடந்த சடலங்களையும் கடந்தவாறு முன்னணிக்கு களமுனைக்கு சென்று கொண்டிருந்தவர்களின் முகத்தில் எந்தச் சுரத்துமே இல்லாதிருந்தது.
அன்றிரவு களமுனையில் நான் கண்டு கடந்து வந்த காட்சிகள் இன்னமும் கண்ணுக்குள்ளேயே நின்று சுழன்று கொண்டிருந்தன. சினிமாவில்கூட இரத்தக்காட்சிகள் வரும்போது கண்களை மூடிக் கொள்ளும் இயல்பு கொண்டவர்கள்தான் எனது அதிகமான தோழிகள். காலம் எம்மீது திணித்துவிட்டிருந்த அந்த போராட்ட வாழ்க்கையின் . சில தருணங்களில் நாம் கண்னால் காணும் காட்சிகள் மனதை மிகவும் பேதலிக்கச் செய்பவையாக இருந்தாலும் கட்டளைக்கு கீழ்பணியும் இராணுவ மரபு செயலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் இயந்திரம் போலாக்கிவிடும்.
அன்றையபோரில் ஈடுபட்டுக் மரித்துப் போன இராணுவத்தினரதும், போராளிகளினதும் சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு கிடந்ததை என் கண்களால் கண்டேன். பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதுவுமே அப்போது அந்த முகங்களில் தென்படவில்லை. உயிர் போகும் தருணத்தின் கடைசி வலி மட்டும் அந்த முகங்களில் எஞ்சியிருந்தது.
ஓயாமல் பெய்த வண்ணமேயிருந்த மழை அங்கு சிந்திக் கொண்டிருந்த இரத்தத்தை கரைத்துக் கொண்டு சிவப்பு வெள்ளமாக வயல்களிலும், வாய்க் கால்களிலும் வழிந்தோடிக் கொண்டிருந்தது . அந்தக் குருதிச் சகதியில் கால்கள் புதையப் புதைய நடந்த போது, இனம்புரியாத ஏதோவொரு இயங்குவிசை என்னை நெட்டித் தள்ளிக் கொண்டு போவதைப் போல உணர்ந்தேன்.
அடுத்த கட்டளை எந்த நேரத்திலும் எனது அணிக்கு பிறப்பிக்கப்படலாம் என்பதை ஊகிக்க முடிந்தது, உடனடியாக முன்னேறிச் செல்வதற்குரிய தயார் நிலையில் இருந்து கொள்ளும்படி எனது அணியைச் சேர்ந்த தோழிகளுக்கு அடிக்கடி அறிவுறுத்தல் கொடுத்துக் கொண்டிருந்தேன். உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாயிருந்த, அவர்கள் ஒவ்வொருவருடைய முகங்களிலும் களைப்பு அப்பிப் போயிருந்தது. நின்று நிதானித்துக் கொண்டிருக்க நேரமிருக்கவில்லை, தமக்காக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த உலர் உணவுகளை உண்டு பசியாறிக்கொண்டும், தமது துப்பாக்கிகளை சுத்தப்படுத்திக் கொண்டுமிருந்தனர். அவர்களிடையே வழக்கமான எந்த சல சலப்புக்களும் இருக்கவில்லை, ஒரு இறுக்கமான மனநிலையுடன், கட்டளைகளை செயற்படுத்துவதில் மட்டுமே அவர்களுடைய புலன்களை குவித்திருந்தார்கள், ஏதோ ஒரு கட்டத்தில் அந்த சண்டை முடிவுக்கு வரும் போது, உயிரோடு திரும்பும் சந்தர்ப்பம் சிலருக்காவது கிடைக்கலாம். ஆனாலும் எல்லா முகங்களிலுமே அப்படியொரு நிச்சயம் முற்றாக துடைக்கப்பட்டிருந்தது.
திடீரென உலங்கு வானூர்திகள் சில மும்முரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டே வட்டமடிக்கத் தொடங்கின. வேறு சில உலங்கு வானூர்திகள். தரையிறங்குவதும் மேலெழும்புவதுமாக இருந்தன. இராணுவத்தினரும் தமது அணிகளை தயார்படுத்துகிறார்கள் எனப்புரிந்தது. அவர்களில் காயப்பட்டிருந்தவர்களையும், உயிரிழந்துவிட்டவர்களின் உடல்களையும் அந்த வானுார்திகளில் ஏற்றிச் செல்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்களில் எஞ்சியிருப்பவர்களும் பிரிந்து போன தமது நண்பர்களுக்காக மனம் வருந்திக் கொண்டு, அடுத்த கட்ட யுத்தத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன்.
எனது பார்வை உறங்கிக்கிடக்கும் சங்கவி மீது படிந்தது. சாதாரண நாட்களில் தலையிடி காய்ச்சல் எனக்கூட படுத்தறியாத சங்கவி, பயிற்சிக் காலங்களில் நின்று கொண்டே நித்திரை கொள்ளுவாள். குப்புறப்படுத்து நிலையெடுத்தால் பாதியுடம்பு மூழ்கும்படியானபடியான சேற்று வயலில் மணிக்கணக்காக நீளும் இரவுப் பயிற்சிகளின் போது மெல்லிய குறட்டையுடன் அவள் உறங்கி விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் இப்போது அவளைப்பார்க்க பொறாமையாக இருந்தது. எப்படியொரு நிம்மதியான உறக்கத்திற்குள் சென்றிருக்கிறாள். எனக்கும் கூட உடனடியாகவே அவளைப்போல உறங்கிவிட வேண்டும் போலிருந்தது.
வானூர்தியிலிருந்து படையினருக்கு வீசப்பட்டிருந்த உணவுப் பொதிகள் எமது பக்கத்திற்கும் தாராளமாகவே வந்து விழுந்திருந்தன. பேரீச்சம்பழ பக்கற்றுக்கள், டின்களில் அடைக்கப்பட்ட சமைத்த உணவு வகைகள், சீஸ்கட்டிகள், இப்படி நிறைய, ஆனால் எனக்கோ பசி, தாகம் என்பதை உணர முடியாமலிருந்தது. எனது வயிறு ஒட்டிப் போய் இறுகிக் கிடந்தது. ஒருமிடறு தண்ணீர் கூட உள்ளிறங்குமா எனத் தெரியாதிருந்தது.
முதல்நாள் மத்தியானம் விசேட உணவாக தரப்பட்டிருந்த புரியாணிப்பார்சலில், மிகவும் சுவையாக சமைக்கப்பட்டிருந்த கோழியின் கால் எலும்பை கடித்து சுவைத்துச் கொண்டிருந்த சங்கவியின் தோற்றம் கண்ணுக்குள் வந்து நின்றது, அவள் நல்ல சாப்பாட்டுப்பிரியை, எஸ். பொ வின் “நனைவிடை தோய்தல்“ புத்தகத்தை வாசித்து வாசித்தே நாக்கைச்சப்புக் கொட்டுவாள்.
“இந்தச்சண்டை முடிந்தவுடனே வீட்டுக்கு போய் முதல் வேலையாக அம்மாட்டச் சொல்லி குழல்புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும், நிறைய வெங்காயம் போட்ட முட்டைப் பொறியலும் செய்து சாப்பிடவேணுமடி” என்பாள். சாதாரணமாக பசியிருக்கவே மாட்டாள், கொஞ்சமாக வயிறு கடிக்க ஆரம்பித்ததும் எல்லா வேலைகளையும் மறந்து எங்கயாவது கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா, என தேடத் தொடங்கி விடுவாள். நள்ளிரவு நேரமானால் கூட காவல்கடைமை முடித்த கையுடன் ஏதாவது கொறித்து விட்டுத்தான் நித்திரைக்குப் போவாள். இப்போது பசியே இல்லாத மாதிரி படுத்துக் கிடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சங்கவியின் ஜீன்ஸ் பொக்கட் ஒன்று புடைத்துக் கொண்டு இருப்பதைக்காணமுடிந்தது. கையை உள்நுழைத்துப் பார்த்தேன். “ஓ…. முதல் நாளிரவு கடைசியாக அனைவருக்கும் பகிரப்பட்ட அப்பிள் பழம். இதையேன் சாப்பிடாமல் வைத்திருந்திருந்தாள் என்ற கேள்வி மனதிற்குள் ஓடியது. எத்தனை நாட்கள் ஒரு கப் தேனீரை மாறி மாறி குடித்திருக்கிறோம், ஒரு கோப்பையில மட்டுமே சோறு கிடைக்கும் சந்தர்ப்பங்களில், “அள்ளிச்சாப்பிடு அள்ளிச்சாப்பிடு” என வாஞ்சையுடன் எனக்கென ஒதுக்கி விட்டுக் கொண்டு தான் உண்பது போன்ற பாவனையில் இருந்திருக்கிறாள். நட்புடன் பகிர்ந்து ருசிக்கும் பிஞ்சு மாங்காயின் சுவை கூட, எவ்வளவு அலாதியானது. காதைச்சுற்றி ரீங்காரமிடும் துரத்த முடியாத வண்டுகளைப்போல நினைவுகள் சுழலுகின்றன.
எனது கைகள் அவளின் நெற்றியை வருடின. முதல்நாள் மாலை திடீரென தனது குறிப்பு புத்தகத்தை என்னிடம் நீட்டியிருந்தாள் “இதை உன்ர பாக்கில வை இருக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டாள்.. “திரும்பிப் போகக் கிடைத்தால் நிறையக் கதைகள் எழுத வேணும்” கொள்ளை கொள்ளையான கதைகளை மூடி வைத்திருக்கும் பெட்டகம் மாதிரித்தான் அவளுடைய மனதும் இருந்தது,
சங்கவி தூங்கிக் கொண்டேயிருக்கிறாள். ஒரு உழவு இயந்திரம் பெட்டியுடன் வந்து நின்றது. “ கெதியா ஏத்துங்கோ… கெதியா… ” படபட வென நாலைந்து போ் கால்களிளும் கைகளிலும் பிடித்து துாக்கியெடுக்க நான் அவளின் தலையைப் பிடித்துக் கொண்டேன். ஏற்கனவே பல உடல்கள் ஏற்றப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டிக்குள்ளே அவளையும் ஏற்றியாகி விட்டது, நான் கீழே நி்ன்றவாறு விலகிப்போக மனதில்லாமல் சங்கவியின் தலையை தொட்டுக் கொண்டேயிருந்தேன், அவள் முகத்தை விடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. மெதுவாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது உழவு இயந்திரம்.
அன்றிரவு எமது அணிகள் முன்னேறிச் சென்று போரிட்டுக் கொண்டிருந்த போது, சங்கவியும் தனது அணியுடன் போரில் ஈடுபட்டிருந்தாள். அப்பொழுது சரமாரியாக அவளது அணியை நோக்கி தீர்க்கப்பட்ட வேட்டுக்களில் ஒரே ஒரு ரவை அவளது இதயப்பகுதியை ஊடுருவிச் சென்றிருந்தது. உடனே சற்று தலையை உயர்த்தியவளிடமிருந்து ’ஹக்’ என்ற விக்கல் போன்ற ஒரு சத்தம் மட்டுமே கேட்டது. அடுத்தகணம் வாயிலிருந்து சிறிதளவு இரத்தம் கசிந்த வெளியேறியது. எந்த துடிப்போ, துள்ளலோ இல்லாமல் மௌனமாக தலை சரியத் தொடங்கிய சங்கவியின் முகம் சேற்று வயலில் பொத்தெனப் புதைந்து போய் விட்டது .
அவளது உடலையும் தோளிலே சுமந்து கொண்டுதான் பின்வாங்கியிருந்தோம். வெகு நேரத்தின் பின்பு அதையும் அனுப்பியாயிற்று. பளிச்சென்ற குங்குமம் தீட்டிய அவளது தாயின் வதனமும், கனிவான புன்னகை படர்ந்திருக்கும் அவளின் தந்தையின் முகமும் எனது கண்களுக்குள் வந்து நின்றது. அடி வயிற்றிலிருந்து கிளம்பிய திரணையொன்று நெஞ்சுக்குள்ளேயே சிக்கிக் கொண்டதால் பிளந்து விடுவது போன்ற வலியில் மூச்சு திணறியது எனக்கு. தீக்கங்குகள் போல சிவந்துபோயிருந்த கண்களின் எரிவு தாங்கமுடியாதிருந்தது. அந்த உழவு இயந்திரத்தின் சத்தம் தூரத்தில் தேய்ந்து மறைந்து போனது. எனக்கோ அசையவும் முடியாமலிருந்தது.
“உங்கட ரீமை வேகமாக நகர்த்திக் கொண்டு ஆழமரத்தடி சந்திக்கு வாங்கோ”. வோக்கி டோக்கி இரைச்சலுடன் எனது அணிக்கான கட்டளையை அறிவித்திருந்தது, மீண்டும் போர்க்கள முன்னணிக்கு நகர்வதற்கானக்கான வேகமான தயார்ப்படுத்தலுக்காக அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன, கரு மேகங்கள் சூழ்ந்த வானம் இருள்மூடிக் கிடந்தது. நசநச வென்று வெறுக்கும்படியாக மழை பெய்து கொண்டேயிருந்தது, இடை வெளியில்லாமல் காது கிழியும்படி பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன. நிணமும் குருதியும் கடைவாயில் வழிய வழிய பசியடங்காத பூதம்போல மீண்டும் பயங்கரமாக வாயைப்பிளந்து கொண்டது யுத்தம்.
(1993-11-11) பூநகரிச் சமரின் உண்மைச்சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்டது)
நன்றி பதிவுகள்

Freitag, 2. Oktober 2015

இலக்கு / Sucess


_________________________________________________________________


அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றபட்டுள்ளது. இத் தீர்மானம் இலங்கையின் இராஐதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியா? அல்லது நீதிகோரும் தமிழர்களிற்கு கிடைத்த ஏமாற்றமா? தமிழர்களிடையும் சிங்களவர்களிடையேயும் பரவலாக விவாதிக்கும் செய்தியாக உள்ளது. இத்தீர்மானம் பற்றியோ அல்லது அரசபயங்கரவாதத்திற்கான விசாரனை பற்றியோ அல்லது சர்வதேச நீதி விசாரனை போன்ற விடயங்களை விவாதிப்பதற்கு முன்னர் தமிழராகிய நாம் எமது அபிலாசைகள் எதிர்பார்ப்புகள் அரசியல் தீர்வுபோன்ற பல் வேறுவிடயங்களை பற்றி நாம் எம்மை நாம் புடம்போட்டுக்கொள்ளல் வேண்டும். அவ்வகையில் சில பல கேள்விகளையும் யாதார்த்த நிலைமையை கவனத்தில் கொண்டு எனது பார்வையை இங்கு பதிவிடுகின்றேன்.

இறுதி யுத்ததில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணை ஏன் அவசியம்?
  1. குற்றத்தினை இழைத்த உரிய அரசியல்வாதிகளிற்கும் இராணுவவீரர்களிற்கும் தண்டனை வாங்கி கொடுப்பது.
  2. இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினை நிருபித்து சர்வதேசத்திடம் இருந்து அரசியல் தீர்வுபொதியை பெற்றுகொள்வதை சாத்தியமாக்குவது.
  3. இலங்கை அரசின் குற்றங்களை நிருபித்து பாதிக்கப்பட்டவர்களிற்கான உரிய வாழ்வாதாரங்களை நட்ஈடாக பெற்றுகொடுப்பது.
  4. இவ்விடயத்தினை ஓவ்வொரு வருடமும் பேசி அதிதீவிர தமிழ்தேசியத்தினை பேசி மீண்டும் ஓர் கடும்போக்கு அரசியலை அல்லது போராட்டத்தினை சாத்தியப்படுத்துவது.
இவ்வாறு பல்வேறு நிலைப்பாடுகளை பலதரப்புக்கள் பதிலாக வைத்திருக்கின்றனர். இது எவ்வாறு சார்த்தியம் என்பதனை ஆராயும் முன்னர் இன்னொரு கேள்வியினை தொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
யாரிடம் நாம் இந்நியாயத்தினை அல்லது நீதியை கோருகின்றோம்?
பதில் சர்வதேசம் என்பதே பலரின் பதிலாக அமையும். இதற்கு நாம் அடுத்த கேள்வியை தொடுக்கவேண்டும். இச் சர்வதேசம் யார்? இவர்களில் பலர் இலங்கை அரசுடன் ஒன்றிணைந்து இறுதியுத்ததினை நடாத்தியவர்கள். எவ்வாறு நாம் அநீதி இழைத்தவர்களிடையே நீதி கேட்பது என்ற கேள்வி எழுகின்றதல்லவா. அப்படியாயின் பதில் சர்வதேச காய்நகர்த்தலில் யுத்தின் பங்காளிகளின் இலங்கை சார்பு நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இந்நிலைமையை தமிழர்தரப்பு சாதகமாக பயன்படத்தி கொள்ளலாம் என்பதனையும் இரஐதந்திரரீதியான வாதமாக கொள்ளலாம். அவ்வாறாயின் சார்பு நிலைகள் மாறுவதற்கு காரணமாக காரணிகள் எவை என்ற கேள்வி எழுகின்றது. அதற்கான பதில்களாக யுத்தம் நடைபெறும்போது இலங்கை அரசு இந்திய சீன ஆதரவாளனாக இருந்தது. அன்றைய 9/11 சம்பவம் பயங்கரவாத ஓழிப்பு என்ற போர்வையில் உலகத்தில் அனைத்து போரட்டங்களை ஓடுக்கும் பெரும்பாண்மை கருத்தியலை அமெரிக்கா உருவாக்கியிருந்துது. இதனாலே இலங்கை அரசும் புலிகளினால் அனுப்பபட்ட விமானத்தினை கொழும்பு வரை அனுமதித்து இலங்கையும் இந்தியாவும் வேடிக்கை பார்த்து பயங்கரவாத ஓழிப்பு என்பதற்கு வலுவான சந்தர்பங்களை உருவாக்கினர். அதுமட்டுமல்லது புலிகளின் ஏனைய செயற்பாடுகளும் இதற்கு வலுவூட்டியது.

ஏன் யுத்ததின் பின்னர் இறுதியுத்ததினை நடாத்திமுடிந்தபங்காளிகள் வேறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்தனர்? அனைவரும் அரசுகளிற்கு எதிரான போரட்டங்களை ஓடுக்குவதற்காக கைகொடுத்தனர். அத்துடன் தெற்காசியபிராந்தியத்தில் புலிகளை வைத்து தமது நலனை சாதிக்கும் நிலமை அற்றிருந்ததும் ஓர் காரணமாக அமைந்திருந்தது. அவ்வாறு ஓர் தேவை அன்று இருந்திருப்பின் புலிகளை ஓழிக்கும் நடவடிக்கை நடைபெற்றிருக்காது. இந்தியா புலிகளின் கடந்தகால செயற்பாடுளினால் புலிகளை அழிக்க கங்கணம் கட்டியிருந்த நிலமையும் அன்று முதன்மையாக காணப்பட்டது. யுத்ததின் பின்னர் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் முக்கிய நோக்கம் இலங்கையை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து அகற்றி தமது தலையீட்டினையும் ஆதிக்கத்தினை நீலைநாட்டுவது.

இந்நிலைப்பாட்டின் மாற்றத்தினாலே மகிந்த சாம்ராஐயம் ஓரம்கட்டப்பட்டு வேறு அரசு உருவாக்கப்பட்டது. இன்று இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கு ஆதரவான இலங்கை அரசின்மீது கடும் நெருக்கடிகளை கொடுக்க விரும்பாததினால் அமெரிக்கவினால் கொண்டுவரப்பட்ட சிறுது இறுக்கமான கலப்புநீதிமன்ற முறையினை கொண்டுவந்து பின்னர் இலங்கை அரசின் விருப்பத்திற்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகள் இணைந்த விசாரணை என்றுமாற்றி அமைக்கபட்டது. மற்றும் பல சொற்பதங்கள் மென்மையாக்கபட்டது. அதுமட்டுமன்றி புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களும் விசாரிக்கபடவேண்டும் என்ற விடயங்களும் உள்ளடக்கபட்டன.

போர்குற்ற விசாரனை என்றால் இருதரப்பு தவறுகளும் கண்டறியப்படவேண்டும் என்பது ஓர் பொதுவான நியதியாக இருந்தாலும் அன்றைய யுத்ததில் ஈடுபட்ட பல முக்கிய அல்லது பொறுப்பெடுக்கவேண்டிய புலிகள் பலர் உயிருடன் இல்லை. இது எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வி எழுகின்றது.

இக்குறைந்தபட்ச விசாரணை பொறிமுறை நன்மைபயக்குமா? இது ஓர் கண்துடைப்பா? இவற்றை முற்றுமுழுதாக நிராகரிப்பதா? அல்லது முடிந்தவரையில் நடைமுறைப்படுத்துவதா? அல்லது தனியே இலங்கை அரசிற்கு எதிரான கடும் எதிர்ப்பரசியலை நடாத்துவதா? போன்ற கேள்விகள் எம்மிடத்தில் ஏற்படுவது நியாமனது. ஆனால் எவ்வகையான வழிமுறை இராஐதந்திரமானது என்ற முக்கியமான கேள்விக்கு பதில்காண்பதே எம் முன்னே இன்று முன்னெழுந்திருக்கும் சவாலாக உள்ளது.

யுத்தகுற்றங்கள் கலப்புமுறை நீதமன்ற முறையிலான விசாரணைகளின் முடிவு ஆனாலும் பொதுநலவாய நாடுகளின் தலையீடுகளினூடாக பெறப்படும் விசாரணையின் முடிவானாலும் வெளிவரும் காலப்பகுதியில் நிலவும் அரசியல் சமூக நிலைமைகளே அம்முடிவின் போக்கினை தீர்மாணிக்கபோகின்றது.

சுவிற்சர்லாந்து அரசியலில் இடம்பெறும் சர்வஐன வாக்கெடுப்புகளில் அவ்விடயத்திற்கு ஆதரவான கட்சிகளும் எதிரான கட்சிகளும் கடும்பிரச்சாரத்தினை செய்தபோதும் ஓர் தரப்பு வெற்றிபெறுகின்றது. அன்றைய அரசியல் சர்வதேச நிலைமைகளின் போக்கும் இம் முடிவுகளில் கட்டாயமான தாக்கத்தினை செலுத்தியிருக்கும். தோல்வியுற்றவர்கள் அக்கருத்தினை அடுத்த கருத்துகணப்பு வரைக்கும் தொடர்ச்சியாக வேலை செய்வார்கள் சில வேளைகளில் அடுத்தகணிப்பில் வெற்றிபெறும்வாய்பு பெறுகின்றது.


எமது அரசியல் பாரம்பரியத்தில் முன்வைக்கும் கோரிக்கைகள் உடன் சார்த்தியப்பட வேண்டும் அல்லது நிராகரிப்பு. இந்த மனோநிலை மாற்றமடையவேண்டும் கிடைக்கும் சிறிய வாய்ப்புகளை பெற்று உயர்ந்த இலக்கை அடையதொடர்ச்சியான செயற்பாடுகள் அவசியம். ஓர் ஆற்றங்கரையைகடக்க தனியே கயிறும் மரக்குற்றிகள் தான் கைவசம் இருப்பின் அவற்றை பயன்படுத்தி பாலத்தினை உருவாக்கி கரையினை அடையவேண்டும். இவற்றை மறுத்துவிட்டு நாம் மிக விரைவில் கொங்றீட் பாலம் அமைத்துதான் கரைசேர்வோம் என்று அடம்பிடித்ததால் எமது கண்முன்னே உள்ள கயிறையும் மரக்குத்திகளையும் பாவனைசெய்யாது கொங்றீட்பாலத்திற்காக காத்திருப்போமாயின் அவை உக்கி பிரயோசனமற்று போவதுமட்டுமல்ல கரையும்போய் சேர முடியாத நிலை உருவாகும். இன்றைய நிலைமைகளை கருத்தில் கொண்டு எல்லோரும் ஓன்றிணைந்து சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள ஓத்துழைப்புகளை நல்கி முடிவுகள் வரும் தருவாயில் அடுத்தகட்ட நகர்வுகளை தொடர்வதே புத்திசாலித்தனமானது. இவ்வகையில் கிடைக்கப்பெற்ற நல்ல சந்தர்பங்களை நழுவவிட்ட படிப்பினைகள் நிறைய எக்கு உண்டு. இலங்கை அரசின் அரசியல் நகர்வேயே நல்ல உதாரணமாக எடுத்துகொள்ள வேண்டும். இன்றைய இலங்கை அரசின் அபிவிருத்தி பொருளாதார திட்டங்களிற்கு ஏனைய உலகநாடுகளின் நிதி பொருளாதார முதலீட்டின் அவசியமும் கட்டாயமும் உள்ளது. இவை கருதியே தம்மீது முன்வைக்கபட்ட சிறுது கடுமையான நகலை திருத்தி தாமே ஆமோப்பிபதாக கையெழுத்து இட்டு மற்றைநாடுகளின் நற்பெயரை சம்பாதித்து கொண்டதே இலங்கைக்கு பெரிய வெற்றி. இவ்வகையில் நாமும் வழங்கப்பட்டுள்ள சிறிய மைதானத்தில் பல கோல்களை அடிப்பதற்கான தருணங்களை ஏற்படுத்துவதே சிறந்தது