Freitag, 27. Februar 2015

புலம்பெயர் தமிழரின் குறுந்தேசியவாதமும் வளர்ந்துவரும் இனவாதபோக்கும்

புலம்பெயர் தமிழரின் குறுந்தேசியவாதமும் வளர்ந்துவரும் இனவாதபோக்கும்

தமிழ் நாட்டின் தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பாடல் போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய கனடா வாழ் தமிழரின் சிறுமியின் பங்குபற்றல் பற்றியும் அந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் அறிவிப்பு பற்றியும் பல கருத்துக்கள் கடந்தவாரத்தில் முகநூலை ஆக்கிரமித்து வந்ததினை அவதானித்திருப்பீர்கள்.

புலம்பெயர் தமிழ் சமூகத்தின் சிந்தனையை புடம்போட ஓர் சந்தர்பத்தினை இவ்விவாதங்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. நான் இங்கு தொலைக்காட்சி நிறுவனம் பதிவுசெய்த எண்ணிக்கை பற்றியோ அல்லது அவர்கள் அறிவித்த வெற்றியாளர்கள் பற்றி விமர்சிக்க வரவில்லை. மாறாக அறிவிக்கப்பட்ட முடிவின் பிற்பாடு புலம்பெயர் தமிழ் சமூகம் இந்நிகழ்வினை பார்த்த முறைபற்றியும் எழுப்பப்ட்ட போர் முழக்கங்கள் பற்றியுமே எனது பதிவில் ஆராயவுள்ளேன்.

எல்லாவற்றுக்கு முன்னதாக இந்நாடுகளில் தஞ்சமடைந்த எம்மவரின் நிலையை பற்றி ஓர் மீள் நினைவு செய்யவேண்டியுள்ளதுபல ஐரோப்பிய நாடுகளில் எம்மவர்கள் தஞ்சம் புகுந்த போது ஓர் குறிப்பிட்ட காலம் இருந்து விட்டு நாடு திரும்புவோம் என்ற எண்ணமே எம்மில் பெரும்பாலனோரை ஆட்கொண்டிருந்தது. பலர் தமிழர் தம்மை 
தொழில்ரீதியில் இச்சமூகத்துடன் இலகுவாக இணைத்துகொண்டிருந்தனர். இந்நாடுகளின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மனிதவலுவின் தேவை எழுந்திருந்தபோது நிரந்தர வதிப்பிட அனுமதியை வழங்கி தமது தேவைகளையும் இவ் அரசுகள் பூர்த்தி செய்து கொண்டது. இந்நடவடிக்கையானது எம்மவரின் இருப்புக்களையும் நிரந்தரமாக்கியது

இனவாதசக்திகளினால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களில் மூழ்கிப்போன பல பிரசைகளினாலும் புதியநாஐிகளினாலும் பல இன்னல்களை நேர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் பல சவால்களையும் எதிர்நோக்க வேண்டி இருந்தது. இவற்றை எல்லாம் எம்மவரின் தனியே தொழில்ரீதியான இணைவாக்கமும் எதிர்பின்மை பண்பும் இவற்றை தவிடுபொடியாக்கியதுஇவற்றிற்கு மேலாக எமது இரண்டாவது தலைமுறையினர் கல்விபயின்று இந்நாடுகளில் அனைத்து துறைகளியும் கால் பதித்துள்ளனர். அதுமட்டுமல்லாது உள்ளுராட்சி மகாணசபை பாரளுமன்ற அரசியலிலும் பங்குபெற்றும் தேர்தல்களிலும் போட்டிபோட்டும் வெற்றிபெற்றுள்ளனர். இங்கு தான் எனது முதல் விமர்சனம் ஆரம்பமாகின்றது. இந்நாடுகளில் நடைபெற்றதேர்தல்களில் இந்நாட்டு பூர்விக பிரசைகளின் பெரும்பாண்மையான வாக்குகளே எம்மவர்களின் வெற்றியை  தீர்மானித்தது. ஓரு கணம் இந்நாட்டு பிரசைகள் இந்நாடுகளில் பிழைக்கவந்தவர்கள் எம்மை ஆழ்வதா என்று கருதியிருந்தால் ஐரோப்பா கனடா நாடுகளில் ஓரு தமிழரும் வெற்றிபெற்றிருக்க  இயாலாது. இந்நாட;டு பிரசைகள் பிராசா உரிமை பெற்றவர்களிற்கு தம்மை போலவே அரசியலில் பங்குபெறும் சகல உரிமைகளும் உள்ளது என்னபதனை மனதார ஏற்று கொண்டதன் மூலமே எம்மவரின் அரசியல் பிரவேசம் இலகுவாகியது

தொலைக்காட்சி போட்டியில் கலந்து கொண்ட சிறுமி எம்மினத்தவர் என்ற நோக்கத்திலேயே ஓருவர் நூற்றுக்கு மேற்பட்ட வாக்குகளை அள்ளி வழங்கி அவரே வெல்ல வேண்டுமென ஆதங்கமும் வெறியும் கொண்டனர். இங்கு பங்கெடுத்த பிள்ளைகளின் திறமையை பாராது
தனியே இனம் மட்டுமே முந் நிலைப்படுத்தப்பட்டது. தொலைக்காட்சி நிறுவனம் தனது சந்தைப்படுத்தும் தந்திரத்தினை முன்நிறுத்தி இரண்டாவது இடத்தினை வழங்கியதுமுதலிடத்தினை பெற்ற தமிழ் அல்லாத கன்னட சிறுமியின் வெற்றியை தமிழுக்கு ஏற்பட்ட கழங்கமாக கருதி பல புலம்பெயர் தமிழர்கள் தமது பதிவுகளின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். தமிழ் நாட்டில் உள்ள மக்கள் இவ்வாறு இனவாதத்தினை விதைக்கவில்லை. ஆனால் தஞ்சம் புகுந்த எம்மவர் விதைத்தனர். அதுமட்டுமல்லது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்களிற்கு புலம்பெயர் நாடுகளில் தடை எனவும் அறிவித்தனர். அதற்கு மட்டுமே ஏகப்பட்ட லைக்குகள் வேறு. தாம் தென்னிந்திய கலைஞர்களை அழைத்து புலத்தில் நிகழ்ச்சி நடத்தலாம் ஆனால் இதென் இந்திய கலைஞர்கள் இலங்கைக்கு சென்று கலை நீகழ்ச்சிகளில் பங்குபற்றினால் அது ஓர் இனத்தூரோகமாக பார்க்கும் போக்கு வளர்ந்துவருகின்றது. ஆக மொத்தத்தில் இலங்கை வாழ் தமிழர்களை குத்தகைக்கு எடுத்த ஆதிக்க மனோபாவம் வளர்ந்துள்ளது. 

ஓர் இனம் அரசியல் காரணங்களுக்காக இலங்கையில் தமிழ் பேசும் பகுதியில் தஞ்சம் அடைந்திருந்தால் எம்மவரால் இனவாதகருத்துக்கள் விதைக்கப்பட்டு அச்சமூகம் சொல்லனா துன்பங்களை நேர் கொண்டிருக்கும்  என்பதனை பதிவிடப்பட்ட குறுந்தேசியவாத கருத்துக்கள் எடுத்துரைக்கின்றன.

தமது சொந்த இடங்களை விட்டு நாடுமாறிய சமூகங்கள் தமது அடையாளங்களை காப்பாற்றுவதாக கருதிக்கொண்டு அதி தீவிர இனவாதிகளாகவும் மதவாதிகளாக மாறியுள்ள பல எனைய சமூகங்களையும் ஐரோப்பிய நாடுகளில் காணமுடிகின்றது

இலங்கையில் விதைக்கப்பட்டிருந்த இருதரப்பு இனவாதத்தினால் பெரும்பாண்மை சமூகமும் சிறுபாண்மை சமூகங்களும் இணைவாக்கம் அடையாது தமக்கிடையிலான இடைவெளியை அதிகரிக்கசெய்துள்ளது. இவ்வகைபோக்கு தமிழ்நாட்டில் குறைவாகவே தென்படுகின்றது. ஆனாலும் தமிழ்நாட்டில் தஞ்சம்புகுந்துள்ள இலங்கைதமிழரின் வாழ்வு வளம்பெற இயலாது அகதிவாழ்வாகவே தொடர்கின்றது. நீண்டகாலமாக வாழும் ஓர் சமூக குழுமத்திற்கு அரசியல் உரிமை இந்தியாவில் மறுக்கப்பட்டுள்ளதானாலேயே இலங்கை தமிழர்களிற்கு இவ் அவல நிலமை. இவ்வகையான உரிமை மறுப்புகளாலேயே இலங்கை வாழ் மலையகமக்களுக்கும் மிகவும் இக்கட்டான வாழ்வாதார நெருக்கடிகளை முகம்கொடுக்கின்றனர். 

புலம்பெயர் நாடுகளில் எம்மவர்கள் பலர் வேறு சமூகங்களை குறைத்து மதிப்பிடுவதும் கள்ளர் கொள்ளையர் என பட்டங்கள் கொண்டு அழைப்பதும் தொடருகின்றது. கறுப்பினத்தவரை கண்டால் எம்மவரில் பலர் கிட்ட நெருங்கமாட்டார்கள். ஆனால் அவர்களோ எம்மைக் கண்டவுடன் சகோதரா என்பார்கள். தம்மை மட்டுமே உயர்ந்தவர்களாக கருதும் பண்பு எம்மவர்களிடம் அதிகமாக காணப்படுகின்றது. தமது பிள்ளைகள் இந்நாட்டுப்பிள்ளைகளுடன் விளையாடுவதை பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். எம்மைப்போல் தஞ்சம் அடைந்த இன்னுமோர் சமூகத்தின் பிள்ளைகளுடன் விளையாடவிடுவதில்லைஇதேபோல் பல ஐரோப்பிய தமிழர்கள் வீடுகள் வாங்கும் பொழுது அக்கம் பக்கத்தில் இந்நாட்டு பிரஐகள் இருந்தால் பெருமையாக நினைப்பார்கள்இந் நடவடிககைள் எம்மவரில் உட்புகுந்துள்ள குறுந்தேசியவாதத்தினையே புலப்படுத்துகின்றது

சுவிற்சர்லாந்து நோர்வே டென்மார்க் போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்த அகதிகளை அந்நாட்டு அரசுக்கள் ஆங்காங்கே வேவ்வேறு பிரதேசங்களிலேயே பரவலாக குடியமர்த்தினர். இந்நடவடிக்கையின் பலனாக புலம்பெயர் தமிழர்கள் இந்நாட்டு பிரசைகளுடன் குறைந்தபட்சம் தொடர்புகளை பேணும் சந்தர்பங்களை வழங்கியது. ஆனால் லண்டன் பாரிசு ரொரண்டோ நகரங்களில் வாழும் புலம்பெயர்ந்தவர்கள் தமக்கென வேலியிட்டு அந்நாட்டு பிரசைகளுடன் தொடர்புகளே அற்று தனியே தமது இனங்களுடனேயே தெடர்புகளை பேணிவருகின்றனர். 

நான் ஓருதடவை பரிசில் பேரரூந்தில் இல் சென்று கொண்டிருக்கும் போது ஓரு கறுப்பினத்தவர் மிகவும் சத்தமாக தொலைபேசியில் உரையாடிக்கொண்டருந்தார் அதே இனத்தை சேர்ந்தவர் சத்தமாக உரையாடுபவரை கடுமையாக திட்டினார். தமக்கு மிகவும் சத்தமாகவுள்ளது மெதுவாக பேசுமாறு கடுமையாக தெரிவித்தபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் அதிகரித்தது. இதன் போது ஓர் பிரஞ்சு நாட்டவர் தலையிட்டு அவர் சத்தம் போட்டு பேசியவருக்கு ஆதரவாக பேசி இது ஓர் பொது போக்குவரத்து வண்டி அவரிற்கு தொலைபேசுவதற்கு உரிமையுள்ளளது உங்களிற்கு பிடிக்கவில்லை என்றால் சற்று தள்ளி நில்லுங்கள் ஆனால் அவருடன் சண்டை போடவேண்டாம் என சொல்லி இரு தாரரையும் சமாதனப்படுத்தி இருந்தார். நான் அவரது கருத்து சுதந்திர பண்பை எண்ணி வியந்துபோனேன்

இலங்கையில் வாழும் தமிழர்களது அபிலாசைகளையும் நெருக்கடிகளையும் புரியாது தாம் பேசும் அரசியலையே அவர்களும் பேச வேண்டுமென எதிர்பார்ப்பதும் அதிகாரப் போர்வையில் கட்டளையிடும் போக்கும் வளர்ந்து வருகின்றது. இவ்வகை செயற்பாடுகளால் புலம்பெயர் தமிழ் சமூகம் இலங்கை வாழ் தமிழ்சமூகத்தின் சிந்தனையிலிருந்து வேறுபட்டு தனித்து நிற்கின்றது. இரண்டாவது தலைமுறையினர் தம்மை இந்நாடுகளில் இன்னமும் இணைத்துக்கொள்ளும் தன்மையே அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது


நாமும் எவ்வித அரசியல் உரிமைகளுமற்று இரண்டாந்தர பிரசைகளாக கருதி ஓதுக்கப்பட்டிருந்தால் இன்று எமது குழந்தைகளின் எதிர்காலங்கள் எவ்வாறு அமைந்திருக்கும்? ஆனாலும் எதிர் காலங்களில் இனவாதங்கள் தலைதூக்காது என்பதனை உறுதிப்படுத்த இயலாது. சம கால அரசியல் பொருளாதார நிலைமைகளே இதனை தீர்மானிக்கும்

புலம்பெயர் தமிழர் எப்பவுமே இனவாதத்திற்கு எதிரானதும் சிறுபாண்மை இனங்களின் உரிமைக்கு ஆதரவான அரசியலையே பிரதித்துவபடுத்த முன்வர வேண்டும். குறுந்தேசியவாத கருத்துக்களை விதைப்பது மேலும் மேலும் பாரிய மூர்க்கத்தனமான பல் வேறுவகையான இன ஓடுக்குமுறைகளை முகங்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தங்களும் ஆபத்துக்களுமே அதிகரிக்கும். இது புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிற்கு மட்டுமல்லாது இலங்கையில் வாழும் தமிழர்களையும் பெரிதளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதனை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.