Mittwoch, 18. Mai 2016

மே 18 பற்றிய புரிதலும் புதிய தேடலின் அவசியமும்.

மே 18 பற்றி பலரும் தமது அபிப்பிராயத்தினை பதிவுசெய்துள்ளனர். ஓரு சில தரப்பு தனியே ஓர் நினைவு நாளாகவும். வேறு சிலர்; மே 18 ஓர் முடிவல்ல இதுவே ஓர் ஆரம்பம் வீறு கொண்டுள்ளனர். புலத்தில் பல ஊர்வலங்கள் கூட்டங்களும் ஓன்று கூடல்களும் நடைபெற்றுள்ளன.

மே 18 னை எப்படி புரிந்து கொள்வது? 

  • ஆயுதப்போராட்டதினது முடிவாகவும் 
  • முதிர்வுக்கு மிஞ்சிய அதி தீவிர தமிழ்தேசியத்தின் அறுவடையாகவும் 
  • அரசியல் அற்ற ஓர் விடுதலை இயக்கத்தின் முடிவாகவும் 
  • சர்வதேசத்தின் நகர்வுகளை சரிவர கணிப்பிடாததின் விளைவாகவும் 
  • மறு பிரதி செய்ய முடியாத சமூகப்பரம்பலை கொண்ட மிக சிறிய எண்ணிக்கையில் உள்ள சிறுபாண்மை தமிழ் இனம் என்பதனை கணக்கில் எடுக்காமையின் விளைவாகவும்
  • தனியே பணமும் ஆயுதங்களும் போராட்டத்தினை வெற்றியை நோக்கி நகர்த்தாது என்பதற்கு கிடைத்த பாடமாகவும்
  • எதிரி ஓர் அரச பலத்தினை கொண்டவன் என்பதனையும் மேலும் அரசுகள் தமது அதிகாரங்களை தக்க வைப்பதற்கு ஏனை அரசுகளுடன் நிபந்தனை அற்று கை கோர்ப்பார்கள் என்பதனை எதிர்வு கூறாமையின் விளைவாகவும்.
  • தனியே தமிழ் தேசியம் காது கிழிய இந்திய தமிழ் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நம்பினால் என்ன நடக்கும் என்ற தகவலை உரக்க தெரிவித்த ஓர் முரசு ஓலியாகவும்.
  • பின்வாங்கும் கொரில்லா தந்திரோபயத்தினை கைவிட்டு தமது தகுதிக்கு மீறிய ஓர் மரபு வழிபோரிற்கு தயராதனால் ஏற்பட்ட விளைவாகவும்.
  • கறுப்பு சந்தை ஆயுதங்களும் ஓர் போராட்டத்தின் வெற்றியையும் தோல்வியையும் தீhமானிக்கும் என்பதற்கு ஓர் பாடமாகவும்.
  • இந்தியாவின் நலனுக்காக ஊதிப்பெருக்க வைத்த ஓர் போரட்டம் இந்தியாவின் நலனுக்கு தேவை அற்ற பொழுது அழிக்கும் செயலையும் செய்யும் என்பதற்கான சாட்சியாகவும்.
  • புலம்பெயர் புலிகளினால் போரட்டத்தினை சர்வதேசப்படுத்துகின்றோம் கூறிக்கொண்டு தமாகவே சர்வதேச நாடுகளின் உளவுகளின் கால்களில் விழுந்ததும் பின்னர் இச்சர்வதேச உளவுகள் போரட்டத்தினை எவ்வாறு நகர்த்தும் என்பதற்கு கிடைத்த ஓர் அனுபவமாகவும். 
  • உட்கொலைகளையும் சக சகோதர படுகொலைகளையும் ஏனைய சிறுபாண்மை சமூகத்தின் உரிமைகள் மறுக்கப்பட்ட போதும் கண்டிக்காது இருந்த மௌனத்திற்கு கிடைத்த பின்விளைவாகவும்
  • பல எதிரிகளை தாமே உருவாக்கியதன் பலனாகவும்
  • சிங்கள மக்களிற்கு போராட்டத்தின் தேவையையும் நியாயத்தினையும் அறியப்படுத்தாது சாதாரண சிங்களமக்களிற்கு எதிரான போரட்டமாக மாற்றபட்டதிற்கு கிடைத்த தோல்வியாகவும்

இவ்வாறு நடந்தேறிய படுகொலைகளுக்கானதும் தோல்விக்காண காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இனியும் இவ்வாறு படுகொலைகளும் ஓடுக்குமுறைகளும் நடைபெறாது எவ்வாறு இலங்கை வாழ் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் அமையவேண்டும் என்பதனை இன்றும் கவனத்தில் எடுத்து கொள்ளாத புலத்து புலிகளின் செயற்பாடுகள கவலை தருகின்றது. இலங்கையில் உள்ள தமிழ் தேசிவாதிகளின் இனவாத பேச்சுகளும் நடவடிக்கைகளும் புலத்திலும் இன்னமும் புதிய பெயர்களில் செயற்பட்டு வரும் புலி ஆதரவாளர்களின் செயற்பாடும் இலங்கை வாழ் தமிழர்களின் இருப்பினையே குழி தோண்டி புதைக்கப் போகும் ஆபத்தாகும்.

ஏதோ தெரியாத்தனமாக விடுதலைப் புலிகளின் தலைவர் போராட்டத்தினை புலத்தில் உள்ள இரண்டாம் தலைமுறையிடம் போராட்டம் கையளிக்கப்பட வேண்டும் என்று கூறிச்சென்ற கூற்றினை வைத்து கொண்டு ஓரு சிறிய எண்ணிக்கையை கொண்ட இரண்டாம் தலைமுறையினர் கொக்கரிக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் உள்ள கட்சிகளிலேயே முதியோர் இல்லம் நடத்த கூடிய நிலைமையே உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள இளைஞர்களும் இளைஞிகளும் கல்விகற்கும் காலப்பகுதியில் அரசியலில் ஈடுபடுகின்றனர். தொழிலில் தம்மை இணைத்துகொண்ட பிற்பாடு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் குறைந்து செல்லும் போக்கே காணப்படுபின்றது. ஆதன் விளைவாகவே இங்குள்ள கட்சிகளுக்கு வேட்பாளர் பற்றாக்குறையும் ஏற்படுகின்றது. இப்பற்றாக்குறையினை எம்மை போன்ற புலம்பெயர்ந்தோர் கட்சியில் இணைந்து வெற்றிடத்தினை நிரப்பி வருகின்றோம். இலகுவில் பொறுப்பான பதவியினை கைப்பற்றகூடிய வாய்புக்களும் ஏற்பட்டுள்ளது. 

புலத்தில் உள்ள இணர்டாம் தலைமுறைத் தமிழர்களில் பலர் உயர் கல்வியே கற்கின்றனர். தம்மை இவர்கள் தொழிலில் நிரந்தரமாக தம்மை ஈடுபடுத்திய பிற்பாடு நாங்கள் தான் இவர்களை பார்த்து இவர்களும் தமிழர்கள் என்று சொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. தத்தமது உரிமைகளிற்காக போராடும் சக்திகள் தாம் வாழும் சொந்த இடங்களிலேயே தோன்றுவதே யதார்த்தமானதும் சாத்தியமானதும்.


சுவிற்சர்லாந்து தலைநகரில் இன்று நடைபெற்ற ஓன்று கூடலில் ஓர் ஆயிரக்கணக்காணவர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்ததினை காணக்கூடியதாக இருந்தது. இக் கூட்டத்தில் பேசிய ஓருவர் தமிழ் ஈழத்தினை ஆதரிப்பவர்கள் தமிழர்கள் எனவும் இதனை எதிர்ப்பவர்கள் சிங்களவர்கள் என இரண்டு தரப்பினராக பிரித்து தனது அரசியல் அறிவைப்புலப்படுத்தி உள்ளார். அதுமட்டுமல்லாது இங்கிலாந்தில் இரண்டு குழுக்களாக மே 18 கூட்டங்கள் இடம்பெறுவதாகவும் அவற்றில் ஓர் குழு தேசிய கொடி (புலிக்கொடி) இன்றி நடாத்துகின்றது எனவும் மற்றைய குழு இங்கிலாந்து அரசின் அனுமதிபெற்று தேசிய கொடிக்கான (புலிக்கொடி) அங்கீகாரத்தினை வாங்கி ஓன்றுகூடல் நடாத்தியதாக குறிப்பிட்டிருந்தார். இது தனியே புலிகள் இயக்கத்தின் கொடி மட்டுமே இது இலங்கை வாழ் தமிழர்களின் தேசிய கொடியாகாது. 

பேர்ணில் நடைபெற்ற மே 18 நிகழ்வு ஓர் தனி புலிப் பிரச்சாரக் கூட்டமாக அமைந்திருந்தது. இக்கூட்டத்தில் புலிகொடிகள் மட்டுமே பறக்கவிடப்பட்டிருந்தது. மே 18 இல் தனியே புலிகள் மட்டும் மடியவில்லை பல சாதாரண மக்களின் உயிர்களும் பறிக்கப்பட்டன என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் போலும். தனியே மக்களின் இழப்புக்கள் தமது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் ஓர் விடயமாகியுள்ளது. போர் நடந்த போதும் இவர்கள்; அதிக மக்களின் இழப்பே சர்வதேசத்தின் தலையீடு சாத்தியம் என்று கனவு கண்டவர்கள். 


மீண்டும் மீண்டும் நடைபெற்று முடிவடைந்த யுத்ததின் முடிவினை கொண்டு எவ்வித பாடங்களை கற்றுகொள்ளாமல் மேலும் உலகத்தின் மனிதாபிமானத்தின் சாட்சியாக உள்ள "ஐக்கிய நாடுகள்" சபைக்கு தமிழர் விடயம் எடுத்து செல்லப்பட வேண்டும் என துடிக்கின்றனர். அனைத்து ஐரோப்பிய அமெரிக்க பாராளுமன்றங்களில் தமிழர் பிரச்சினை பேசு பொருளாகவேண்டும் என சூழ் உரைக்கின்றனர். இதற்கு ஆதரமாக ஓரு சில இந்நாட்டு பாராளுமன்ற வாதிகளிற்கு மேடை கொடுத்து பேசவைத்து நாம் சர்வதேச அங்கீகாரத்திற்காக செயற்படுகின்றோம் என்பதனை காட்ட பெரு முனைப்பு எடுக்கின்றனர். இவர்களின் சர்வதேச காய் நகர்த்தலால் தமது இலங்கை பயணம் தடைப்பட்டு விடும் பலர் இக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.ஊர்வலங்கள் கவனயீர்ப்பு போராட்டங்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் அனைத்து செய்திதாள்களின் பக்கங்களை நிரப்புவது மட்டமல்லாது யாருக்கு எதிராக போராட்டம் செய்கின்றோமோ அவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதாகவும் போராட்ட நியாத்தினை மக்கள் மனதில் பதியப்படுத்துவதாக அமையவேண்டும். 

வழமையாக வீதி ஓரங்களில் போடும் காப்புகடைகள் போன்று ஓர் புதிய விடயமாக மக்களால் அவதானிக்கபடுவதில்லை. இதே காப்புகடைகள் போன்று வருடாந்தம் ஐ.நா விற்கு முன்பாகவும் பேர்ண் பாராளுமன்ற முன்றலிலும் புலிகளால் நடாத்தப்படும்; திருவிழா கூட்டங்கள் பற்றிய செய்திகள் பத்திரிகையில் ஓர் பெட்டி செய்தியாக கூட வெளியாவதில்லை. ஆகவே இவ்வகை ஆரவாரத்தில் செலவழிக்கப்படும் பணங்கள் முள்ளிவாய்க்காளில் வாம்வாதரங்களையும் போரட்டத்தினால் அங்கங்களை இழந்து அங்கவீனமுற்றோர்களிற்கு கொடுத்து உதவ முன்வரலாம். 

புலத்திலுள்ள புலிகளும் புதிதாக தோன்றியுள்ள இரண்டாம் தலைமுறை அரசியல்வாதிகளும் முதலில் அரசியலை கற்றுகொள்ள வேண்டும். அரசியல் அறிவு தான் உங்கள் சிந்தனை பரப்பினை அதிகரிக்கும். இதன் மூலமே மக்களின் உரிமைகளை வென்ற எடுக்க கூடிய பாதையினை கண்டுகொள்ள முடியும். 


இரண்டாம் யுத்தம் தந்த கசப்பான அனுபவங்களின் விளைவே இன்றும் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளை ஏற்றுகொள்ளும் மனோ நிலையும் மற்றைய இனங்களுடன் விட்டுகொடுத்து வாழும் மனோ நிலையும் இணைவாக்கத்தினையும் கற்றுகொடுத்தது.

புலம்பெயர் வாழ் இரண்டாம் தலைமுறையினர் ஏற்கனவே எவ்வித ஆய்வுகளும் கணிப்புகளும் இன்றி தோற்றம் பெற்ற தேசியவாத கருத்துகளாலும் ஆயுதபோரட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகளை கருத்தில் கொண்டு தங்களின் தேடல்களை வலுப்படுத்துவதன் மூலமே நீங்கள் முள்ளிவாய்க்காளில் உயிர்நீத்த போராளிகளிற்கும் மக்களிற்கும் மே 18 இல் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.



க.சுதாகரன்
18.05.2009