Donnerstag, 22. Januar 2015

சிறுவர்கள் பதின்ம வயதினர்க்கு ஏற்படும் மன அழுத்தமும் அதன் பாதிப்பும்


மொழிபெயர்ப்பு (க.சுதாகரன் சுவிற்சர்லாநது 3.11.2011)

சிறுவர்கள் பதின்ம வயதினர்க்கு ஏற்படும் மன அழுத்தமும் அதன் பாதிப்பும்...

பொதுவாக இளம்பராயத்தினரின் மன அழுத்தத்தினை பெரியவர்கள் கண்டறிவது மிகக் கடினமானது. ஆனாலும் பெரும்பாலும் அவர்களின் அன்றாட நடைமுறையும் அதனால் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடுகளுமே அவர்களது மன அழுத்தினை கண்டறிவதற்கான இலகுவான பாரம்பரிய முறையாக இருந்துவருகிறது. இளவயதினரின் பருவமாற்றங்கள் புதிய விடயங்களை தோற்றுவிக்கின்றன. காதல் பிரிவு புதிய உறவுகள் அல்லது பெற்றோரிடமிருந்து ஏற்படும் பிரிவுகள் போன்ற பல்வேறுபட்ட காரணிகள் இளையோரிடம் நம்பிக்கையீனத்தினை தோற்றுவிக்கின்றன. சிலவேளைகளில் அதுவே மன அழுத்தத்தினை தோற்றுவிக்கின்ற காரணியாகவும் அமைகின்றது. சிறார்கள்; இவ்வாறு நெருக்கடியான நிலைமையில் கவலையின் நிமித்தம் சோர்வடைவதற்கு மாறாக, தமது மனத்தாக்கங்களை அதிதீவிர கோபத்தினால் வெளிப்படுத்துகின்றனர். ஆனால் பதின்ம வயதினர் தமது மனத்தாக்கங்களை வெளிப்படுத்த முடியாத நிலையில், அவர்களை மன அழுத்தம் இயல்பாக சூழ்ந்துகொள்கின்றது. இது அவர்களிற்கு வயிற்று நோ அல்லது தலைவலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

மனஅழுத்தத்தின் அறிகுறிகள்

சிறுவர்கள் 1-3 வயதுப் பிள்ளைகளிடம்...


சிறுவர்கள் 1-3 வயதுப் பிள்ளைகளிடம் காணப்படும் கீழ்வரும் குணாம்சங்கள் அவர்களிடம் மறைந்திருக்கும் மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் காரணிகளாகக் கொள்ளப்படுகின்றன.

- கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படல்

- எப்பொழுதும் பயப்படுவது அல்லது அதிகூடிய கூச்ச சுபாவத்தைக் கொண்டிருத்தல்

- மிக விரைவில் அழுவது

- விளையாடுவதற்கு விருப்பமின்றி இருத்தல்

- கூடுதலாக பெருவிரல் சூப்புதல்

- பாலியல் உறுப்புடன் அதிகம் விளையாடுதல்

சிறுவர்கள் 3-6 வயதினர்க்கான வெளிப்பாடுகள்


- கவலையுடன் இருப்பதும், உணர்வு ஏதுமின்றி சோர்வுடன் காணப்படுதல்

- முகங்கொடுக்காது பின்வாங்குவது, மிக விரைவில் ஆத்திரமடைவது

- பயங்கரக் கனவினால் அவதியுறுவது, இரவில் அடிக்கடி நித்திரையிலிருந்து எழுவது

- நண்பர்கள் இன்மை, விளையாடுவதில் ஆர்வம் காட்டாமை

- பொதுவாக எதிலும் விருப்பமின்மை

- உடல் பருமன் குறைதல் அல்லது அதிகரித்தல்

பாடசாலை செல்லும் வயதினர் - வயது 7 இலிருந்து


- கவலையாக இருப்பதாகக் கூறுவது

- தற்கொலையைப் பற்றி அதிகம் கதைத்தல்

- பாடசாலை வேலைகளில் கடினம்

- குற்ற உணர்வு

- எவற்றிலும் நம்பிக்கையீனம்

இளையோர் (பதின்ம வயதினர்)


- தன்னம்பிக்கையின்மை

- கூட்டு முயற்சிகளில் கலந்துகொள்ளாமை அல்லது அவற்றை தவிர்த்துக் கொள்ளல்

- மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை இன்மை

- கல்விவழி முன்னேற்றத்தில் வீழ்ச்சி

- நித்திரையின்மை அல்லது பசியின்மை

- தானாக தனது உடலில் பல காயங்களை ஏற்படுத்துவது

- தற்கொலை பற்றி சிந்தித்தல்

இவ்வாறான குணாம்சங்களுக்கு உட்படும் பல பிள்ளைகளை சோம்பேறிகள் அல்லது கோபக்காரர்களாக பெற்றோரும் சரி அல்லது மற்றையோரும் சரி சாதாரணமாகக் கருதுவதுண்டு. மாறாக அவர்களிடம் மனது சம்மந்தப்பட்ட ஏதோ ஓரு பிரச்சினை இருப்பதாகக் கருதுவதில்லை. அதைக் கண்டுபிடிக்க முனைவதுமில்லை. இந்நிலையில் அப் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய பேருதவி, பெற்றோர்களாகிய நாங்கள் அவர்களுடன் எதையும் கலந்து ஆலோசிப்பதற்கான தயார்நிலையில் இருக்கின்றோம் என்பதை தெரியப்படுத்துவதுதான். பிள்ளைகளும் அதற்கான தமது ஓத்துழைப்பினை வழங்க வேண்டியதும் முக்கியமே!

Hilfe für depressive Kinder (மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் பிள்ளைகளுக்கான உதவிகள்) என்ற நூலை எழுதிய Lawrence L. Kerrns என்பவர் இளம் பருவத்தினருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று 

விபரிக்கிறார். முக்கியமான பத்து விடயங்களை அவர் குறிப்பிடுகிறார்.

1. உங்கள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வது, உங்கள் எதிர்பார்ப்புக்களை தெட்டத்தெளிவாக தெரியப்படுத்துவது, உங்களுடன் கலந்துபேசுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது.

2. பிள்ளைகளை எள்ளி நகையாடும் சந்தர்ப்பங்களை தவிர்த்துகொள்ளல், அல்லது அவ்வகையான சந்தர்ப்பங்களில் உங்கள் குழந்தைகளை தற்காத்துக் கொள்ளல்.

3. பிள்ளைகளுடனான உங்கள் ஆர்வத்தினை தெரியப்படுத்துதல், அவர்கள் சிந்திக்கும் அல்லது அச்சப்படும் விடயங்களை கேட்டு அறிந்துகொள்ளல், அவற்றில் அக்கறை எடுத்துக்கொள்ளல்.

4. பல்வேறுபட்ட சூழல்களுக்கு ஏற்ப வெற்றியை நோக்கி வழிநடத்தல். அதாவது பாடசாலைக் கல்வியில் கூடிய ஆர்வத்தை நோக்கியும்;, விளையாட்டில் வெற்றியை நோக்கியும், நட்புவட்டங்களில் நட்பை வளர்ப்பதிலும் வெற்றியை நோக்கி வழிநடத்துதல்.

5. குழந்தைகளிடம் (இழிவுபடுத்தல், மற்றவர்களுக்கு முன்னால் கண்டித்தல் போன்ற) எதிர்நிலை விமர்சனங்களைத் தவிர்த்தல். மிகத் தெளிவாக, முடிந்துபோன விடயங்கள் மீதான அபிப்பிராயங்களை அவர்களுக்கு சாதகமான முறையில் சொல்லும்போது அவர்களிடம் இருக்கும்; பயம் நீக்கப்படுகின்றது. சரியான விடயங்களில் பிள்ளைகள் மனத்தை ஒருநிலைப் படுத்தும்போது அதைப் பாராட்ட வேண்டும், மெச்ச வேண்டும். 

6. பிள்ளைகள் மீதான உங்களுடைய எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு சாத்தியமா என்பதனை கவனத்தில் கொள்ளல் வேண்டும். தகுதிக்கு மிஞ்சிய எதிர்பார்ப்பு தேவையற்ற பயத்தினை பிள்ளைகள் மத்தியில் தோற்றுவிக்கும். பிள்ளைகளின் திறமைகளையும், திறமையின்மைகளையும் அவதானித்து வைத்துக் கொள்ளுதல் பெற்றாரின் முக்கிய கடமையாகும்.

7. பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதை ஏற்றுக்கொள்ளப் பழகுதல் வேண்டும். சில சந்தர்ப்பங்களில் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களாக இருப்பின், அதனை சகித்துக்கொண்டு நட்புரீதியில் உங்கள் அபிப்பிராயத்தினை தெரிவித்துக் கொள்ள வேண்டும். 
பிள்ளைகளுக்கு ஆர்வமில்லாத வீட்டுப்பாடங்களில் இணைந்து உதவிசெய்து, அவ்விடயத்தில் ஆர்வத்தினை ஏற்படுத்த வேண்டும்.

8. பிள்ளைகளிடம் தாமே தனியே வேலைகளைச் செய்ய விடவேண்டும.; அவர்களால் சரிவரச் செய்ய முடியாவிடின் உங்கள் உதவியைக் கொடுக்கலாம். அதன்மூலம் தன்னம்பின்கை வளர்க்கப்பட வேண்டும்.

9. அவர்களுடைய தனி அறையின் ஒழுங்கமைப்பை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். விரும்பினால் உங்களின் ஆலோசனையை வழங்கலாம். இவ்வகை நடவடிக்கைகள் முடிவெடுக்கும் தீர்மானத்தினை வளர்க்கும். 

10. உள்வாங்கும் தன்மையை அல்லது கல்விகற்கும் தன்மையை வளர்த்துவிடுங்கள். தன்னைப் பற்றிய சுயமதிப்பீட்டைச் செய்ய கற்பிக்க வேண்டும்.

66 வீதமான இளையோர் -பிழையான வழிமுறையாக- தற்கொலையை ஓர் தீர்வாக்குகின்றனர். இவ் வழிமுறை தொடர்வதனை தடுக்க வேண்டும். “வியன்” இல் உள்ள இளையோர் சம்பந்தமான மனோதத்துவ நிபுணர் Max Friedrich தற்கொலை சம்பந்தமான தனது கட்டுரைத் தொகுப்பில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். இப் பிரச்சினை உடையோர் தமது முகத்தை முகமூடியால் மறைத்துள்ளனர். மனஅழுத்தத்திற்கு உள்ளானவர் பலர் “எப்படி இருப்பினும் மூன்றாம் உலக யுத்தம் வரப்போகிறது, நாம் எல்லோரும் அழியப் போகின்றோம்” என குறிப்பிடுகின்றனர். இவ்வகையான கூற்றுக்களை ஓர் ஆபத்தின் அறிகுறியாகக் கருதவேண்டும் என எச்சரிக்கிறார் அவர்.
கட்டாயமாக தற்கொலைக்குச் சாத்தியமான ஓர் அபாய அறிவிப்பு உள்ளதாக குசனைசiஉh நம்புகின்றார். அதற்கான காரணம் அவர்களிடமே உள்ளது. இளையோர் அவற்றை அமுக்கி வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது தமக்கு விருப்பமான விடயங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றில் தமது ஈடுபாட்டினை நிறுத்துகின்றனர். இவர்களை நன்கு அறிந்தவர்கள் இவர்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டறிந்து, கலந்துபேசுவதற்கான சூழலை ஏற்படுத்துவது அவசியம். இவ் விடயத்தில் பாடசாலை நண்பர்கள், பாடசாலை வைத்தியர்கள், பாடசாலை மனோதத்துவ ஆலோசகர்கள் ஆகியோர் முக்கிய பங்காற்ற முடியும். தற்கொலைக்கு இன்னொரு முக்கிய காரணமாக பாடசாலைகளில் முகங்கொடுக்கும் பல்வேறுபட்ட துன்புறுத்தல்கல்கள்  (Mobbing) முக்கிய பங்காற்றுவதாக Fridrich குறிப்பிடுகின்றார்.

இன்னொரு மனோதத்துவ நிபுணர் Georg Fiedler கூற்றுப்படி, பலர் இது ஒரு பேசக்கூடாத விடயமாகவே கருதுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களிற்கே தெரிவதில்லை, தாம் எவ்வாறு இந்நிலைக்கு உள்ளானோம் என்று. இதனால் உடனடித்தேவையாக மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை கண்டறிந்து, கலந்து பேசுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்கான ஆய்வுகளை அனைத்து தரப்புகளும் மேற்கொள்ளவேண்டும்.

2.5 வீத சிறார்களும் 8.3 வீத இளையோரும் மனஅழுத்தத்தினால் அவதியுறுகின்றனர். அதுமட்டுமல்லாது ஓரு வயது குழந்தை இலிருந்து மூன்று வயது குழந்தை வரைக்கும்கூட இம் மனஅழுத்தங்களிற்கு உள்ளாகியுள்ளனர். தற்கொலை 10 வயது சிறுவர்களிடம் அனேகம் நடப்பதாக Max Friedrich அறியத்தருகின்றார். 

அதுமட்டுமல்லாது வயதுவந்தவர்களில் கூடுதலாக பெண்களே மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் எனவும், மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் ஆண்களிடம் அறிகுறிகளை அறிவது கடினம் எனவும் கூறுகிறார். மனஅழுத்தம் கூடுதலாக பாடசாலை செல்லும் இளையோரையே தற்கொலைக்கு இட்டுச்செல்வதாகவும் மாசி, ஆனி மாதங்களில் ஆகக் கூடுதலாக நடைபெறுவதாகவும், இது பாடசாலை வேலைகளால் ஏற்படும் ஓய்வின்மையால் நிகழ்வதாகவும் குறிப்பிடுகின்றார். மன அழுத்தத்திற்கு உள்ளாபவர்களுக்கு ஏற்படும் நித்திரையின்மை, மனதை ஒருநிலைப்படுத்த முடியாமை, ஆத்திரப்படுதல், தொடர்புகளின்மை... என்பன வெளித்தெரியும் அறிகுறிகளாக உள்ளன. இவற்றிலிருந்து விடுபடுவதற்கு பல்வேறுபட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. நடனம், இசை, உடற்பயிற்சி போன்றவற்றுடன் இணைந்த சிகிச்சை முறைகளும் உள்ளன.

2011 ஜேர்மனியில் Leuphana பல்கலைகழகத்தில் 5840 பாடசாலை மாணவர்களில் எடுக்கப்பட்ட கணிப்பீட்டில், மூன்று பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அவர்கள்; மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாக அறியப்பட்டுள்ளது. இங்கு Gymnasium மாணவர்களை விட Real மாணவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. அவர்களிடம் ஏற்படும் இந்தப் பாதிப்பின் வீதம் 23 இலிருந்து 33 ஆக அதிரித்துள்ளது. புலம்பெயர்ந்த வெளிநாட்டு மாணவர்களில் தனியே 36 வீதமாக அதிகூடியதாக உள்ளது. ஓர் இளம் பராயத்தவருக்கு தொடர்ச்சியாக எதிரான உணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்கள் நிகழும்போது, அது அவரை சூனிய நிலைக்குக் கொண்டு செல்கிறது. இதனால் இளையோரின் எண்ணங்களிற்கு மதிப்பளியுங்கள், சந்தர்ப்பங்களைக் கொடுங்கள், கலந்து பேசுங்கள், தேவையேற்படின் வெளி உதவியை நாடுங்கள்.

Keine Kommentare:

Kommentar posten