Mittwoch, 9. Januar 2019

மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட சுவிற்சர்லாந்து தமிழர்களின் வரலாறும் வரலாற்று கதாநாயர்களும்…சுவிற்சர்லாந்து தமிழர்களின் வன்முறை வரலாற்று பதிவு 2
.சுதாகரன்

முதல்பகுதியில் சுவிற்சர்லாந்தில் தமிழர்களின் இருப்புக்காக போராடியவர்களின் வரலாறும் அன்றைய இனவாத செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். 

எனது பதிவினை பலர் வாசித்து அறிந்திருந்தனர். இது எனக்கு பெரும் ஆச்சரியத்தினை தந்தது. சாதாரணமாக எனது பதிவுகளை வாசிக்கும் வட்டம் மிக சிறியது. மேலும் இப்பதிவு எனக்கு ஓளிவட்டம் சூட்டுவதற்காக எழுதப்படவில்லை. மாறாக அன்றைய பல நிகழ்வுகள் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. இன்றைய இரண்டாம் தலைமுறையினரின் ஓரு சிலர் சுவிற்சர்லாந்தின் தமிழர் இருப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வலதுசாரிக்கட்சிகளிற்கு முண்டு கொடுக்கின்றனர். அவர்களிற்கும் எமது அன்றைய நிலமை புரியவேண்டும் என்பதற்காகவே இப்பதிவினை தொடர்கின்றேன். மேலும் நீண்டகாலம் சுவிற்சர்லாந்தில் குடியேறியவர்களில் ஓரு சிலர் இந்நாட்டிற்கு ஏன் ஆபிரிக்க நாடுகளில் இருந்து அகதிகள் சுவிற்சர்லாந்திற்கு படை எடுக்கின்றனர் என வினவுவதும் மேலும் இவர்கள் சமூக சேவைப்பணத்தில் வாழ்கின்றனர் என நகையாடுவதும் அதற்கு மேல் ஓர் படி சென்று எமது வரிப்பணத்தில் வாழ்கின்றனர் குற்றம் கூறுவது எனது காதுகளிற்கு வந்து விழுந்த செய்திகள்.

இன்றைய பகுதியில் அகதிகளாக தஞ்சம் அடைந்த தமிழர்கள் தனியே வெறுங்கைகளுடன் வரவில்லை. தம்முடன் நாட்டில் பேணிபாதுகாத்த சாதி இன பிரதேச மத வேறுபாடுகள் மற்றும் வன்
முறை கலாச்சாரத்துடனேயே  தஞ்சம் அடைந்திருந்தனர். ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைவது அன்று மிக எளிதான விடயமாக இருக்கவில்லை. பல நாடுகளை கடந்து பல கடினங்களை அனுபவித்தே இந்நாடுகளில் தமிழர்கள் தஞ்சம் அடைந்தனர். தஞ்சமடையும் போது தமக்குள் இருந்த பல்வேறுபட்ட வேறுபாடுகளை அனைத்தையம் பூட்டிவைத்தே இருந்தனர்.  

ஓரளவுக்கு தஞ்சம் அடைந்து தமக்குகிடைத்த முகாம்களில் வாழ்கையை ஆரம்பித்த பொழுது தான் தமக்கில் இருந்த பூதங்கள் வெளியில்வர ஆரபம்பித்தன. இவற்றில் பல அறிவீனத்தினால் நடைபெற்ற தவறுகளும் நடந்தேறின. 

தஞ்சம் அடைந்த தமிழர்கள் ஓர் வன்முiறாளர்கள் என்று பிரச்சாரம் செய்வதற்கு ஏற்ப எம்மவர்களால் நடாத்தபட்ட சட்ட மீறல்கள் அமைந்திருந்தன. பேர்ணில் இருந்த பழைய முகாம்களில் ஓன்றாகிய Worblaufen விடுதி ஆற்றம் கரையோரத்தில் அமைந்திருந்தது. இம்முகாமிற்கு அருகாமையில் ஆடுகளை மேய்க்கும் ஓர் விவசாயி தனது ஆடுகளை நல்ல காலநிலைக்காலங்களில்  மேயவிடுவது வழமை. இந்த முகாமில் இருந்த தமிழர் ஓரு சிலருக்கு ஊரில் ஆடுவெட்டி ஞபபகம் வந்துவிட்டது. ஆட்டுக்கறி சாப்பிடவேண்டும் என்ற விருப்பம் வெறியானது. இதன்விளைவு இம் முகாமில் இருந்த ஓர் சிலர் அருகில் மேய விட்டிருந்த ஆட்டினை கொலைசெய்து பங்கு போட்டு அன்று சமைத்து சாப்பிட்டு விட்டு மிகுதியை முகாமில் இருந்த குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டனர். மேய்ப்பாளர் தனது ஆடு ஓன்றைக் காணவில்லை என பொலிசாரிடம் குற்றபதிவினை மேற்கொண்டது மட்டுமல்லாது முகாமில் இருந்த தமிழர்கள் மீதே சந்தேகம் என்பதனையும் தெரிவித்துவித்திருந்தார். அதன் பிற்பாடு பொலிசாரின் தேடுதலின் போது குளிர்சாதன பெட்டிக்குள் இருந்த ஆட்டிறைச்சி கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். தஞ்சம் அடைந்த தமிழர்களை திருப்பி அனுப்ப காத்திருந்த அரசுக்கும் இனவாதிகளிற்கும் அன்றைய இச்சம்பவம். திருப்பி அனுப்புவற்கு ஏதுவான ஓர் விடயமாகி இருந்தது. தமிழர்கள் எதரியான Blick பத்திரிகை தனது தலையங்கத்தில் ஆட்டை கொலை செய்த தமிழர் என செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தி தஞ்கம் அடைந்த தமிழர்கள் ஓர் கிறிமினல் என்ற பெயரை வாங்கிகொடுத்தது. இந்திய பத்திரிகைகளும் இச்செய்தியை பிரசுரத்திருந்தது.  

அன்;றைய கால கட்டத்தில் சுவிற்சர்லாந்திற்கு தஞ்சம்கோரிய தமிழர்களில் பெரும்பாலானோர் புங்குடுதீவு பிரதேசத்தினை சார்ந்தவர்களாக இருந்தனர். அவர்களில் பலர் உறவினர்களாகவும் அயலவர்களாகவும் இருந்திருந்தனர். இலங்கையில் ஏனைய பகுதிகளை சார்ந்தவர்கள் சிறுபாண்மையாகவே இருந்தனர். 

எல்லோரும் பிரதேச இன சாதி எல்லாவற்றையும் தற்காலிகமாக அன்றைய நிலைகருதி இரண்டாம்பட்சமாக்கி இருந்தனர். முகாம்களில் தனிநபர்களிற்கிடையான முரண்பாடுகள் முற்றும் போது வழமை போல் சாதி மத பிரதேச வேற்றுமைகளை பாவித்து சண்டைகள் பல நடந்தன. இவ்வாறு சண்டைகள் நடப்பது வழமை என்ற நினைப்பே ஆரம்பித்தில் இருந்தது. ஓரு பிரதேசத்தினை சோந்தவருடன் சண்டை நடக்கும் பொழுது மற்றை பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி ஆணிகளைக்கட்டினர். இதுவே யாழ்பாணம் புங்குடுதீவு என்று இருமுகாம்களானது. இவ்விடயம் இத்துடன் முற்றுபெறவில்லை சண்டைகள் பற்றிய தவல்கள் முகாம்பாதுகாவலர்களிற்கு பொலிசார் வெளிநாட்டு பொலிசார்களிற்கு தீயாய்பரவியது. முகாம்களில் அனைத்து பிரதேங்களை சார்ந்தவர்கள் கலப்பாகவே இருந்தனர். துரதிசட்டமாக ஓரு சில முகாம்களில் குறிப்பிட்ட பிரேதேசங்களை சார்ந்தவர்கள் பெரும்பாண்மையாக இருந்தனர். அந்த வகையில் பேர்ணில Bollingen இருந்த முகாமில் யாழ்பாணத்தினை சார்ந்தவர்கள் பெரும்பாண்மையாகவும். Wyler முகாமில் புங்குடுதீவினை சார்ந்தவர்கள் பெரும்பாண்மையாகவும் இருந்தனர். முரண்பாடுகள் பல காலம் நீடித்ததின் விளைவாக தஞ்சம் அடைய விண்ணப்பிக்கும் போதே சுவிற்சர்லாந்து வெளிநாட்டவர் பொலிசார் கேட்கும் முதல் கேள்வி நீங்கள் புங்குடுதீவா? யாழ்பாணமா? ஏன்ற கேள்வியோ முதன்மையானது அதற்கு பிற்பாடே தஞ்சம் அடைந்ததின் காரணங்கள் விசாரிக்கபட்டது. ஞ்சம் அடைந்தவர்களின் பிரதேசத்திற்கு ஏற்ப அப்பிரிவிற்கேற்ப முகாம்களிற்கு அனுப்பிவைக்கபட்டனர்.

க்காலப்பகுதியில் நான் ஓர் மொழிபெர்ப்பாளராக செயற்பட்டிருந்தேன். ஓரு நாள் பிற்பகல் முகாம் அமைப்பாளர்களிடம் இருந்து எனக்கு தொலைபேசி வந்திருந்தது. தொலைபேசியில் என்னை குறிப்பிட்ட நேரத்தில் Bollingen (Bern) விடுதிக்கு வருமாறும் அசம்பாவிதம் ஒன்று நடைபெற இருக்கும் தகவல்கள் தமக்கு கிடைக்கபெற்றதாகவும் என்னிடம் அறிவித்திருந்தனர். அது மட்டுமல்லாது இரு முகாங்களிற்கும் சென்று நடைபெறவிருக்கும் அசம்பாவிதத்தினை தடுக்கவேண்டும் என அறிவித்திருந்தனர். Bollingen (Bern) முகாமில் வழமையாக பலர் பிற்பகலில் பலர் இருப்பார்கள் சம்பவதினம் குறைவானவர்களே தமிழர்களே இருந்திந்தனர். ஏனையோர் எங்கே என கேட்ட பொழுது தமக்கு தெரியாது என இருந்த ஓரு சிலர் கூறியிருந்தனர்.. இவ்விரு முகாம்களும் நடந்து செல்லகூடிய துரத்திலேயே அமைந்திருந்தது. அதனைத்தொடர்ந்து வந்திருந்த அமைப்பாளர்கள் தமது வாகனத்தில் எனனை ஏற்றி கொண்டு மற்றைய முகாமிற்கு சென்று கொண்டிருந்த போது Wankdorf (Bern)  சந்தியில் பல தமிழர்கள் சாரத்துடன் நின்று இருந்தனர். அக்காலப்பகுதியில் நான் சுவிற்சர்லாந்து கிளையின் நிர்வாக உறுப்பினராக இருந்திருந்தேன். எனது வீடு றுனெழச இலிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே அமைந்திருந்தது. 

முகாம் அமைப்பாளர்கள் என்னிடம் சொன்னார்கள் நிலமை கட்டுக்கடங்கமால் சென்றுவிட்டது என்று கூறி என்னை எனது வீட்டில் இறக்கிவிட்டு சென்றனர். பல தமிழர்கள் எனது வீட்டில் தஞ்சமடைய தொடங்கினர். நான் அப்பொழுது 1 1/2 Zimmer வீட்டிலேயே வசித்துவந்தேன் நான் நினைக்கிறேன் அன்றைய தினம் எனது வீட்டிற்கு மாத்திரம் 30 க்கு மேற்பட்டோர் தஞ்சம் அடைந்திருந்தனர். வந்தவர்கள் நடந்த சம்பவத்தினை விவரித்த போது எவ்வகையான கொடூரமானது என்பதனை புரிந்து கொண்டேன். ஓருவரை முகாமில் இருந்த தொலைபேசி பூத்திற்குள் வைத்து பலதடவைகள் குத்தப்பட்டு இரத்த வெள்ளமாக்கபட்ட நிகழ்வு நடந்தேறியிருந்தது. மீண்டும் அடுத்தநாள் பத்திரிகைகளில் படங்களுடன் தமிழரின் வன்முறை முன்பக்க செய்தி ஆனது.

வழமைபோல் மொழிபெயாப்பு செய்பவர்களை எம்மவர்கள் அரசுக்குகாட்டி கொடுப்பவர் என்ற சந்தேகித்திலேயே பார்ப்பது உண்டு. நானும் அதற்கு விதிவிலக்காகவில்லை. எனக்கும் தமிழ் சமூகம் அதே பெயரை தந்திருந்தது. ஏன்னை முகாம் காலர்கள் வாகணத்தில் ஏற்றி சென்றதனை கண்ட சிலர். நான் திட்டமிட்டே தாக்கவந்தவர்கள் முகாமிற்கு முகாம்பாதுகாவலர்களை அழைத்து சென்றேன் என்ற பழி என் மீது விழுந்தது. 


இவ்வளவு விடயத்தினையும் அறிந்திருந்த பொலிசாரும் தமிழர் தமக்குள்ளேயே அடிபட்டு சாகட்டும் என்ற அடிப்படையிலேயே அவர்களின் நடவடிக்கைகளின் துரிதம் அமைந்திருந்தது.

இதனைவிட இன்னுமொரு படி சென்று Bollingen (Bern) முகாமில் இருந்த ஓரு சில தமிழர்களினால் ஓர் புத்திசுவாதினமான ஓர் பெண் பாலியல் வன்முறைக்குட்படுத்த பட்டிருந்தால்.. இச்செய்தியும் பத்திரிகைகள் அனைத்தும் முக்கிய செய்திகளாகியிருந்து. இந்நடவடிக்கைகளிற்கு பின்னர் பல இனவாதிகள் தமிழர்கள் ஓர் காமவெறியர்கள் என்ற கருத்தினை பரவலாக்கியிருந்தனர். தொலைக்காட்சியுpலும் தமழர்கள் நிற்கும் பகுதியில் தனியே செல்ல பயமாக இருப்பதாக ஓர் பெண்  பேட்டியளித்திருந்தார். தமிழர் புகையிரத நிலையத்தில் பல நேரங்களை செலவழித்ததால் இந்நாட்டு மக்களின் வெறுப்பினை சம்பாதித்திருந்தனர். அது போதாது என்று வன்முறை பாலியல் வன்முறை என்று குற்றங்களை வளர்த்து சென்றனர்.

84 - 87 பகுதிகளில் தஞ்சம் அடைந்தவர்களிற்கு வேலைசெய்யும் அனுமதி மறுக்கபட்டிருந்தது. தொழிலும் அற்று இருந்ததால் போதைவஸ்து மஃபியாக்களிற்கு தமிழரை விநியோகஸ்தர்களாக மறுர்றுவது மிக எழிதானது. சில தமிழ் இளைஞர்கள் போதைவஸ்து விநிகோகஸ்தர்களாக மாறினர் கத்து கத்தாக பணத்தினை சம்பாதித்தனர். பணத்தினை கட்டுகட்டாக வைத்து சுதாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் விட்டுபிடித்த பொலிசார் மஃபியாக்களை கைதுசெய்யாது விநியோகஸ்தர்களாக ஈடுபட்ட தமிழர்களை கைதுசெய்தது. 

என்னுடன் பாடசாலையில் ஒன்றாக படித்த ஓர் நல்ல நண்பனும் இப்போதைவஸ்து விநியோகத்தில் ஈடுபட்டு வந்திருந்தான். பணத்தினை சம்பாதித்து தனது குடும்பாத்தாரையும் நண்பர்கள் பலரை செல்வந்தராக வாழவைத்து அழகுபார்த்ததான். புpன்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டான். சிறையில்  சப்பாத்து நடாவினால் தற்கொலை செய்ததாக பொலிஸ் அறிவித்திருந்தது. இச்செய்தி எனது மனதை ஆழமாக பாதித்திருந்தது. ஓரு பக்கம் நண்பனை இழந்த வடு மற்றபக்கம் அவன் ஏன் இந்த தொழிலை தெரிவு செய்தான் என்ற கோபமும் இருந்தது.

இவ்வகையில் சுவிற்சர்லாந்து தமிழர் பற்றிய ஓர் கேவலமான அல்லது ஓர் வெறுக்கதக்க அபிப்பிராயம் இந்நாட்டு மக்களுக்கு விதைக்கும் வகையில் எம்மவர் நடவடிக்கைகளும் அமைந்திருந்தது.

இவற்றை தடுக்கும் வகையில் ஓர் பத்திரிகையும் தமிழர் ஆலோசனை நிலையமும் தேவையும் ஏற்பட்டது. இவ்வகையிலேயே புஸ்பனாதன் மாஸ்டரும் நானும் எனது மொழிபெயர்ப்பு வேலைகளால் அறிமுகம் ஆகிஇருந்தோம். அவரும் Halenbrücke எனும் Bern விடுதியில் வசித்துவந்தார். அவரும் நல்ல ஆங்கில மொழி புலமை இருந்ததினால் மொழி பெயர்ப்பு வேலைகளை செய்து வந்தார். எனக்கும் புஸ்பனாதன் மாஸ்டரிற்கும்  CFD யில் சமூகசேவையாளராக கடமை ஆற்றிய Hugo Lager உடன் தொடர்புகள் ஏற்பட்டிருந்தது. சுவிற்சர்லாந்து வாழ் தமிழர்களிற்கு இந்நாட்டு செய்திகளையும் நிலமையைகளையும் சட்டங்களை எடுத்துரைப்பதற்கு ஓர் தமிழ் பத்திரிகையின் அவசியத்தினை உணர்ந்தோம். இதற்கு CFD நிதியையத் தந்து வேலைசெய்வதற்கான இடத்தினையும் தந்தார். இவற்றை பலன்படுத்தி சுவிற்சர்லாந்தில் முதலாவது தமிழ் சஞ்சிகையான செய்தி என்ற தமிழ் சஞ்சிகையை வெளிக் கொண்டு வந்திருந்தோம். இச்சஞ்சிகையில் ஆக்கங்களை எழுதிய பல நண்பர்கள் இன்றும் உள்ளனர் (பாபு கண்ணன்). 

இந்நாட்டில் தமிழர்கள் பற்றிய தவறான அபிப்பராயங்களை எவ்வாறு களையலாம் என்ற போர்வையில் புகையிரத நிலையத்தில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்ப்பது பற்றியும் இந் நாட்டு ஓழுங்குமுறை பற்றி  கருத்துப்பட ஓர் கட்டுரையை எழுதியிருந்தேன். நான் நினைக்கின்றேன் ஓரு இரு சஞ்சிகையுடன் எனது செயற்பாட்டினை முறித்துக்கொண்டேன். அதற்கு பல காரணங்கள் உள்ளன. அக்காலகட்டத்தில் நான் வேலை செய்துகொண்டிருந்தேன் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக்கழக சுவிற்சர்லாந்து செயற்குழு உறுப்பினருhகவும் செயற்பட்பதனால் தொடர்ச்சியாக புஸ்பநாதன் மாஸ்டர்  உடன் இணைந்து செயற்பட முடியாமல் போனது. 

புஸ்பநாதன் மாஸ்டர் CFD  யில் பகுதி நேர தமிழர் ஆலோசகராக செயற்பட்டு வந்தார். தமிழர்களிற்கான மொழிபெயர்ப்பு மற்றும் தமிழர்களின் அரசியல்நிலமைகள் பற்றி ஊகுனு யினால் ஓழுங்கு செய்யப்படும் விளக்க கூட்டங்களில் கலந்து தமிழர்கள் அரசியல் நிலமைகள் பற்றிய விளக்கங்களை வழங்கிவந்தார். இரவு பகல் என்று பார்க்காது செயற்பட்டார். ஏத்தனை செய்தி சஞ்சிiகாளை வெளியிட்டார் என்ற விபரம் எனக்கு தெரியவில்லை. பின்னைய வெளியீடுகளில் குமுதம் ஆனந்தவிகடனில் வந்த சினிமா செய்திககைளயும் மறுபிரசுரம் செய்திருந்ததை அறிந்திருந்தேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் அமிர்தலிங்கம் அவர்கள் சுவிற்சர்லாந்து வெளிநாட்டு அமைச்சரை சந்தித்து தமிழகளை திருப்பி அனுப்புவதால் ஏற்படும் ஆபத்துக்களை எடுத்துரைத்திருந்தார். ஆதன்பின்னர் புஸ்பநாதன் மாஸ்டரினால் சுவிற்சர்லாந்து தமிழ்மக்களை சந்திப்பதற்கான ஏற்பாட்டினை Fischermätteli (Bern) எனும் இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார். நானும் தமிழீழ மக்கள் விடுதலை கழக செயற்குழு உறுப்பினர்களுடனும் மற்றும் விடுதலைப்புலிகள் சுவிற்சர்லாந்து அமைப்பாளர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தோம். ஆயதபோராட்டமே ஓரே வழி என்பதில் அனைத்து இயக்கதலமைகளும் ஓரே கருத்தினை கொண்டிருந்ததன் விளைவாக மிதவாத பாராளுமன்ற அரசியலை முற்றாக நிராகரிக்கும் வகையிலும் கூட்டத்தினை குழப்பும் வகைகயிலும் எமது செயற்பாடுகள் அமைந்திருந்தது. இன்று அன்றைய எனது நடமுறையை எண்ணி வெட்கி தலை குனிகின்றேன். ஓருவாறு அனைவரையும் சமாளித்து கூட்டத்தினை புஸ்பநாதன் நடாத்தி முடித்திருந்தார். 

இவ்வாறு புலம்பெயர்ந்து சமூகத்தினை வழிநடாத்திய புஸ்பநாதன் மாஸ்டர் Bern புகையிரத நிலையத்தில் நீண்ட நேரத்தினை நேரத்தினை வீண் விரயம் செய்த தமிழர்களை விமர்சித்த புஸ்பநாதன் மாஸ்டர் தனிப்பட்ட பிரச்சினைகளால்; மனமுடைந்நு தனது இறுதிக்காலங்களை Bern புகையிரத நிலையத்தில் களித்த காட்சிகள் மனதை உறுத்தியது. 

Keine Kommentare:

Kommentar posten