Dienstag, 13. August 2019

என்று தணியும் இந்த ஆடம்பர விழா மோகம்?



புலம்பெயயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் கலாச்சாரம் என்ற பெயரில் நடாத்தும் நிகழ்வுகளிலும் தமது குழந்தைகளின் பெயர் வைப்பிலும் ஓர் வேறுபட்ட அடையாளத்தினை கொண்டு வரும் வகையில் செயற்பாடுகள் கடந்த காலங்களில் அதிகரித்துவருகின்றது. இப்புதிய கண்டுபிடிப்புக்களிற்கான உற்பத்தி மையமாக கனடா வாழ் தமிழர்கள் முந்நிலை வகிக்கின்றனர். ஓரு சில புலத்துவாசிகள் இந்நாட்டில் தம்மால் கண்டுபிடிக்கபட்ட திருவிழாக்களை நாட்டில் நடாத்தி அதனை எந்தவிதமான மன நெருடலும் அல்லாது விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

முதலில் குழந்தைகளின் பெயரில் இருந்து ஆரம்பிக்கலாம். பல புலத்துவாசிகள் ஓன்றும் அர்த்தம் புரியாத வகையில் தமது குழந்தைகளிற்கான பெயரை சூட்டுகின்றது. இந்நடவடிக்கையின் மூலம் புலத்தில் பிறந்த குழந்தைகளை பெயர் கொண்டு அடையாளப்படுத்தலாம். இதனை விரும்பாத மொழியால் நேசமுடையவர்கள் தனி தமிழ் பெயர்களையும் சூட்டிவருகின்றனர்.

தமிழை காப்பற்றுவோம் கலாச்சாரத்தினை காப்பாற்றுவோம் என ஊளையிடுவோர் கலாச்சார விழா என்று கூறி அடிக்கும் கூத்துக்கள் சகிக்க முடியாத அளவிற்கு சென்றுவிடுகின்றது. தென்னிந்திய சினிமாவின் பாதிப்பு தலைக்குமேல் ஏறி போதையாகி பல புலத்துவாசிகள் தமது விழாக்களை சினிமாக்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது தமது விழாவில் செய்யாத பல புதிய நடமுறைகளை கலாச்சார இறக்குமதி செய்து அறிமுகப்படுத்துகின்றனர்.

இவ்வாறு செய்து கொண்டு நாட்டிற்கு விடுமுறைக்கு செல்பவர்கள் அங்கு வெளிநாட்டு பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம். அங்குள்ள மக்களிற்கு புலத்தில் உள்ள பிரச்சினைகள் தெரியாது என அறிவுரைகளும் கொடுக்கப்படுகின்றது.

நாட்டிற்கு சென்று பாரம்பரியம் என்ற பெயரில் பணத்தை அள்ளி வீசி பல இல்லாத எடுப்புக்களை எடுத்து மிக ஆடம்பரமாக நிகழ்வுகளை நடாத்திவருகின்றனர். ஆப்படி எல்லாம் செய்து விட்டு நாங்கள் வித்தியாசமாக செய்தோம் என்ற தம்பட்டம் வேறு.

கொண்டாட்டம் செய்யும் விழாக்களில் மட்டுமல்லாது இறப்பு நிகழ்விலும் புதிய கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தமிழர்களின் இறப்பு நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் உணவு மற்றும் குளிர் பாணங்களை வழங்கி அந்நிகழ்வு நடைபெற்ற இடத்தினையே குப்பை கூழம் ஆக்குகின்றனர்.

புலத்தில் வாழ்பவர்கள் இந்நாட்வர்களின் நிகழ்வுகளில் உள்ள நல்ல விடயங்களை கண்டுபிடித்து தமது விழாக்களில் இணைத்துள்ளனரா என்று கேட்டால் மிக குறைவு என்றே கூறவேண்டும்.

ஆனால் விழா கதாநாயக நாயகிகளை கெலிகொப்டர் மற்றும் பு.கையிரதம் குதிரை வண்டி ஊர்வலப்பாணியில கொண்டு இறக்கி பெருமைப்பட்டு கொள்ளுகின்றனர். ஆகமொத்தம் இன்னமும் ராக்கட்டில் இருந்து இறக்கவில்லை. அதனையும் காலப்போக்கில் புலத்தவாசிகள் நடைமுறைப்படுத்துவார்கள் என்பது உறுதி.

பல தமிழர் நிகழ்வுகளில் உணவுப்பண்டங்களும் குளிர்பாணங்களும் மிதமிஞ்சி வீசப்படுகின்றது என்பதை நேரில் பார்த்த பல மண்டப நிர்வாகிகள் விசணப்பட்டுள்ளனர்.