Dienstag, 12. März 2024

இமாலய பிரகடனமும் அதி தீவிர தமிழ் தேசியவாத மீழ் தோற்றமும்.

 12.03.2024 /கணபதிப்பிள்ளை சுதாகரன்

மாலய பிரகடத்தினை இலங்கைத் தமிழ்க்களின் தீர்வு பொதி என புலம்பெயர்  அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் நம்பியதன் விளைவினாகவே துவாராகவின் தோற்றமும் இலங்கைத் தமிரசுக்கட்சியின்  தலைவர் தெரிவியினையும் பார்க்க வேண்டி உள்ளது.

இமாலய பிரகடத்தினை புலிகளின் ஆதரவு தரப்பாக  செயற்பட்ட Global Tamil Forum மினாலும் கனடிய தமிழ் காங்கிரசினாலேயே கொண்டுவரப்பட்டது.

புலத்தில் வாழும் பழைய புலிகள் ஆதரவாளர்களும் அமைப்புக்களும் இன்றும் ஈழவிடுதலைக் கனவிலேயே  வாழும் சமூகமாகவே உள்ளது. தமிழ் தேசியம் என்பதனை ஓர் புனிதக்கோட்பாடகவும் தாம் நம்பும் ஈழமே சாத்தியம் என நினைப்பவர்ககளுமே பெரும்பாண்மையாக உள்ளனர். இக்கருத்துக்களையும் விமர்சிப்பவர்களும் சாத்தியபாடுகள் பற்றி ஆய்வு செய்பவர்களும் துரோகியாக கணிக்கும் பண்பே மேலோங்கி உள்ளது.

இலங்கை வாழ் தமிழ்மக்களிற்கான ஒரு அதிகார பரவாலக்கத்தின் அவசியத்தினையும் அரசியல் உரிமைகளை பற்றி சிந்திக்காது தனியே தமிழ் ஈழம் தான் சர்வ விமோர்சனமாக நம்பி வாழ்ந்துள்ள சமூகமாகவே பல புலம்பெயர் மக்கள் உள்ளனர். மாற்றுத் தீர்வுகளை முன்வைப்பவர்களை துரோகிகளாக இனங்கண்டு ஒதுக்கியதன் விளைவாக ஓர் ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள் நடைபெறவில்லை. மாறாக விடுதலை புலிகினால்  முன்வைக்கபட்ட தமிழ் ஈழ கோரிக்கையை நியாயப்படுத்தும் கருத்து உருவாக்கத்தினை மட்டுமே ஓருதலைபட்சமாக ஊடகங்கள் புலத்து மக்களிடம் விதைத்துள்ளது. இந்த ஊடகங்கள் விடுதலைப்புலிகள் போராடிய காலத்தில் அவர்களின் நிதி ஒத்தாசையுடன் முழங்கின. 

புலிகளின் தமிழ் தேசியம் புலத்தில் ஒரு பிராண்டாக (Trade Mark or Brand) மாறின. தமிழ் தேசியமும் தமிழ் ஈழத்தினை ஆதரித்தாலே புலத்து சமூகத்தில் ஏற்றுகொள்பவர்களாக மதிக்கபட்டனர். இதனால் புலத்தில் இருந்த பெரும்பாண்மையான வியாபாரிகள் விடுதலை புலிகளிற்கு நிதியை வாரி இறைத்தனர். இதன் எச்சசொச்ச பண்பு இன்றும் தொடர்கின்றது. மாற்று கருத்துக்களை முன்வைத்த அணியினர் சிறு பத்திரிகைகள் ஆகவும் முகநூல் இணைய செய்திகளாக குறுகிப்போயின. சிறு பத்திரிகைகளின் வாசகர் சுற்றும் கேள்வியும் குறைந்து சென்றது. இது மட்டுமல்லாது புலிகள் கோயில்கள், கலைநிகழ்வுகள், தமிழ் பாடசாலைகள், தாம்சார்ந்த இலக்கியங்களையும், தன்னகப்படுத்தியிருந்தது. அதன் விளைவாகவே ஒற்றைப்பரிணாமமான கருத்துக்களை கொண்ட சமூகமாக முடக்கபட்டுள்ளது.

இதனால் இந்த சமூகத்தினை ஆட்கொண்டிருக்கும் கருத்தினால் இன்று ஆயுத போராட்டமற்ற நிலையிலும் தாம் நம்பிய தீர்வே ஓரே வழிமுறை என நம்புகின்றது. இந்த கருத்திற்கு மாற்றீடாக தமது ஆதரவு சக்திகளே முன்வைக்கும் போது தம்முடன் பயணித்தவர்களிற்கே தூரோகிப்பட்டம் கொடுக்க தயாராகின்றது.

இலங்கையை ஆட்சி செய்யும் முக்கிய மூன்று கட்டமைப்புக்கள் உள்ளன. 1. பெளத்தபீடாதிபதிகள்

2. மக்களால் தெரிவு செய்யபட்ட பாராளுமன்றம்.

3. இராணுவம்


தமிழ் மக்களிற்கான தீர்வுப்பொதிகள் வரும்பொது முதலில் முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் பொளத்த பீடாதிபதிகள். இதுவரைகாலமும் தமிழரிற்கான தீர்வு திட்டங்களில் இந்திய நோர்வே அரசுகள் தனியே இலங்கை அரசுடனே பேச்சுவார்த்தை நடாத்தி இருந்தன.

பல தேசிய இனங்கள் வாழும் நாடுகளில் முரண்பாடுகளை முடிவிற்கு கொண்டுவருவதற்கு இனங்களிற்கிடையான புரிந்துணர்வே அடிப்பையாக உள்ளது. பேரினவாதத்தின் உயிர்நாடியாக இருந்த பொளத்த பீடங்களை அழைத்து முதலில் சிறுபாண்மை மக்களின் உரிமைக்கான நியாயப்பாட்டினை முன்வைத்து சிங்களமக்கள் மத்தியில் கலந்துரையாடலினை  மேற்கொள்வது ஓர் மிக முக்கிய நகர்வாகும். இதனடிப்படையில் இமாலய திட்டத்தினை முன்மொழிந்திருந்தால் நான் இதனை ஓர் சரியான நகர்வாகவே பார்க்கின்றேன். ஆனால் தமிழ் ஈழமே நிரந்தர தீர்வு எனும் சக்திகள் இம் இமாலய முனைப்பினை தமிழ்மக்களிற்கு செய்யும் தூரோகமாகவும் பேரினவாதத்திற்கு அடிபடியும் செயலாககருதியது.

2009 இற்கு பின்னர் புலத்தில் பல பிரிவுகளாக உடைந்து கிடந்த புலிகள் ஆதரவு அமைப்புக்கள். இமாலய திட்டங்களிற்கும் முன்னெடுப்பிற்கு முட்டுகட்டையாக ஒண்று திரண்டனர். இம்முன்னெடுப்பினை ஓர் தீர்வுதிட்டம் என திரிபுபடுத்து தமிழ்மக்களை ஓர் தேசிய இனமாக வரையறுக்கவில்லை என போர் கொடி தூக்கினர். இம் முன்னெடுப்பிற்கு தமிழ் அரசுகட்சியின் (Illankai Tamil Arasu Kachchi, Tamil Federal Party) பேச்சாளரான சுமந்திரனும் ஆதரவாக செயற்பட்டிருந்தார். இவர் மீது துரோகிப்பட்டம் குடுப்பதற்கான முழு வேலைத்திட்டமும் புலத்தில் இருந்து வழங்கபட்ட நிதி முலமாக நன்கு திட்டமிடப்பட்டு நடாத்தபட்டிருந்தது.

இக்காலப்பகுதியிலேயே தமிழ் அரசுக் கட்சிக்கான தலைவர் தேர்தல் நடைபெற்றிருந்தது. இக் கடசிக்குள் நடைபெற்ற தேர்தலில் பங்கு பற்றிய வேட்பாளர்களை சிறீதரனை தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவராகவும் சுமந்திரனை தமிழ்தேசியத்திற்கு எதிரானவர்களாக சித்தரித்து இருந்தனர். ஒருகட்சியின் உட்கட்சி தேர்தலிற்கு புலத்தின் நிதியும் மேடியாவும் இணைந்து புலத்தில் உள்ள தமிழ் தேசியவாதிகளிற்கு ஆமா போடும் நபரான சிறீதரனை அக்கட்சிக்கு தலைவராக்கியது. 

அது மட்டுமல்லாது  இமாலய திட்டத்திற்கு கனேடிய தமிழ்காங்கிரசும் ஆதரவு தெரிவித்திருந்தது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக கனடாவில் உள்ள அதி தீவிர தேசியம் பேசும் ஆதரவாளார்களால் அக்கட்சி காரியாளயம் தாக்கபட்டது.

இன்னுமொரு பிரிவினராகிய விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிராபகரனும் அவரது மனைவியும் மகள் துவாராகவும் உயிருடன் இருப்பதாக கூறும் கூட்டமும் தமது பங்கிற்கு போலி துவாராகவை தமிழ் மேடியாக்களிறகு அழைத்து வந்தது. மக்களை நம்பவைக்கும் முயறற்சியில் ஈடுபட்டனர். உயிருடன் இருக்கின்றார்கள் என்ற வதந்தியின் போது பல தனிப்பட்டவர்கள் வியாபாரிகளிடமிருந்து பல தொகை பணங்களை சேகரித்து இருந்தனர். இன்னமும் இந்த நிதியை பெருக்குவதற்கும் சிதறி உள்ள பல பழைய புலிகளின் பிரிவுகளையும் ஒன்றணைப்பதற்கும் துவராகவின் வருகை அமையும் என கற்பனை செய்தனர். ஆனால் பல எதிர்மறைவான சம்பவங்களே நடந்தேறின.

இமாலய பிரகடத்தின் மூலம் சிங்கள பேரினவாத கருத்தியல்களை அதற்கு முண்டு கொடுப்பவர்களை வைத்தே, சிங்கள மக்களிடையே சிந்தனை மாற்றத்தினை தேர்தல் காலத்தில் முன்வைத்து ஓர் சிறிய நகர்வாக அமையலாம் என Global Tamil Form எண்ணியது.  Global Tamil Form உடன் ஏற்கனவே அரசியலில் பயணித்தவர்களே எதிராளியானர்கள்.

முதலில் தமிழ் தேசியம் என்றால் என்ன?

இலங்கைவாழ் தமிழர்கனிற்கு எவ்வகையான தீர்வு அவசியமானது? அவ்வகை தீர்வினை அடைவதற்காண வழிமுறை என்ன?

இனங்களிற்கிடையான சமாதனம் இன்றி எந்த தீர்வும் சாத்தியம் இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள கட்சிகள் மட்டும் தமது வேட்பாளர்களை தமிழ் சிங்கள பகுதிகளில் முன்னிறுத்துகின்றது.

தமிழ்கட்சிகள் தனியே தமிழ் பகுதிகளுடன் நிற்பது இனங்களிற்கிடையான சமாதனத்தினை உண்டுபண்ணுமா?

சமஷ்டியை தீர்வாக பேசும் கட்சிகள் சமஷ்டி ஆட்சி நடைமுறையில் உள்நாட்டில் உள்ள பல தேசிய இனங்களை ஒன்றிணைக்கும் விதமாக கட்சிகள் எவ்வாறு வடிவமைக்க வேண்டும்?

தற்பொழுது உள்ள சூழலில் தேசிய இனங்கள் தமது சுய நிர்ணய உரிமையை எவ்வாறு பெறுவது சாத்தியம்

போன்ற பல கேள்விகளிற்கும் விடைகள் தேடவேண்டும். கடந்த காலங்களில் பல முன்னெடுப்புக்களிற்கு தனியே பேரினவாதம் மட்டுமே தடையாக அமையவில்லை. தமிழ் மக்களது பிழையான முடிவுகளும் அமைந்துள்ளது என்பதே கசப்பான உண்மை ஆகும். அவ்வகையான பிழையான நகர்வுகள் பேரினவாதம் மீண்டும் சிறுபாண்மை இனங்கள் மீது சந்தேகம் கொள்வதற்கும், வன்முறையை கட்ட அவிழ்பதற்கும், அரசியல் தீர்வுகளை  நடைமுறைப்படுத்துவதில் தடையாகவே  அமைந்துள்ளது.