Mittwoch, 18. Mai 2016

மே 18 பற்றிய புரிதலும் புதிய தேடலின் அவசியமும்.

மே 18 பற்றி பலரும் தமது அபிப்பிராயத்தினை பதிவுசெய்துள்ளனர். ஓரு சில தரப்பு தனியே ஓர் நினைவு நாளாகவும். வேறு சிலர்; மே 18 ஓர் முடிவல்ல இதுவே ஓர் ஆரம்பம் வீறு கொண்டுள்ளனர். புலத்தில் பல ஊர்வலங்கள் கூட்டங்களும் ஓன்று கூடல்களும் நடைபெற்றுள்ளன.

மே 18 னை எப்படி புரிந்து கொள்வது? 

  • ஆயுதப்போராட்டதினது முடிவாகவும் 
  • முதிர்வுக்கு மிஞ்சிய அதி தீவிர தமிழ்தேசியத்தின் அறுவடையாகவும் 
  • அரசியல் அற்ற ஓர் விடுதலை இயக்கத்தின் முடிவாகவும் 
  • சர்வதேசத்தின் நகர்வுகளை சரிவர கணிப்பிடாததின் விளைவாகவும் 
  • மறு பிரதி செய்ய முடியாத சமூகப்பரம்பலை கொண்ட மிக சிறிய எண்ணிக்கையில் உள்ள சிறுபாண்மை தமிழ் இனம் என்பதனை கணக்கில் எடுக்காமையின் விளைவாகவும்
  • தனியே பணமும் ஆயுதங்களும் போராட்டத்தினை வெற்றியை நோக்கி நகர்த்தாது என்பதற்கு கிடைத்த பாடமாகவும்
  • எதிரி ஓர் அரச பலத்தினை கொண்டவன் என்பதனையும் மேலும் அரசுகள் தமது அதிகாரங்களை தக்க வைப்பதற்கு ஏனை அரசுகளுடன் நிபந்தனை அற்று கை கோர்ப்பார்கள் என்பதனை எதிர்வு கூறாமையின் விளைவாகவும்.
  • தனியே தமிழ் தேசியம் காது கிழிய இந்திய தமிழ் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நம்பினால் என்ன நடக்கும் என்ற தகவலை உரக்க தெரிவித்த ஓர் முரசு ஓலியாகவும்.
  • பின்வாங்கும் கொரில்லா தந்திரோபயத்தினை கைவிட்டு தமது தகுதிக்கு மீறிய ஓர் மரபு வழிபோரிற்கு தயராதனால் ஏற்பட்ட விளைவாகவும்.
  • கறுப்பு சந்தை ஆயுதங்களும் ஓர் போராட்டத்தின் வெற்றியையும் தோல்வியையும் தீhமானிக்கும் என்பதற்கு ஓர் பாடமாகவும்.
  • இந்தியாவின் நலனுக்காக ஊதிப்பெருக்க வைத்த ஓர் போரட்டம் இந்தியாவின் நலனுக்கு தேவை அற்ற பொழுது அழிக்கும் செயலையும் செய்யும் என்பதற்கான சாட்சியாகவும்.
  • புலம்பெயர் புலிகளினால் போரட்டத்தினை சர்வதேசப்படுத்துகின்றோம் கூறிக்கொண்டு தமாகவே சர்வதேச நாடுகளின் உளவுகளின் கால்களில் விழுந்ததும் பின்னர் இச்சர்வதேச உளவுகள் போரட்டத்தினை எவ்வாறு நகர்த்தும் என்பதற்கு கிடைத்த ஓர் அனுபவமாகவும். 
  • உட்கொலைகளையும் சக சகோதர படுகொலைகளையும் ஏனைய சிறுபாண்மை சமூகத்தின் உரிமைகள் மறுக்கப்பட்ட போதும் கண்டிக்காது இருந்த மௌனத்திற்கு கிடைத்த பின்விளைவாகவும்
  • பல எதிரிகளை தாமே உருவாக்கியதன் பலனாகவும்
  • சிங்கள மக்களிற்கு போராட்டத்தின் தேவையையும் நியாயத்தினையும் அறியப்படுத்தாது சாதாரண சிங்களமக்களிற்கு எதிரான போரட்டமாக மாற்றபட்டதிற்கு கிடைத்த தோல்வியாகவும்

இவ்வாறு நடந்தேறிய படுகொலைகளுக்கானதும் தோல்விக்காண காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இனியும் இவ்வாறு படுகொலைகளும் ஓடுக்குமுறைகளும் நடைபெறாது எவ்வாறு இலங்கை வாழ் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் அமையவேண்டும் என்பதனை இன்றும் கவனத்தில் எடுத்து கொள்ளாத புலத்து புலிகளின் செயற்பாடுகள கவலை தருகின்றது. இலங்கையில் உள்ள தமிழ் தேசிவாதிகளின் இனவாத பேச்சுகளும் நடவடிக்கைகளும் புலத்திலும் இன்னமும் புதிய பெயர்களில் செயற்பட்டு வரும் புலி ஆதரவாளர்களின் செயற்பாடும் இலங்கை வாழ் தமிழர்களின் இருப்பினையே குழி தோண்டி புதைக்கப் போகும் ஆபத்தாகும்.

ஏதோ தெரியாத்தனமாக விடுதலைப் புலிகளின் தலைவர் போராட்டத்தினை புலத்தில் உள்ள இரண்டாம் தலைமுறையிடம் போராட்டம் கையளிக்கப்பட வேண்டும் என்று கூறிச்சென்ற கூற்றினை வைத்து கொண்டு ஓரு சிறிய எண்ணிக்கையை கொண்ட இரண்டாம் தலைமுறையினர் கொக்கரிக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் உள்ள கட்சிகளிலேயே முதியோர் இல்லம் நடத்த கூடிய நிலைமையே உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள இளைஞர்களும் இளைஞிகளும் கல்விகற்கும் காலப்பகுதியில் அரசியலில் ஈடுபடுகின்றனர். தொழிலில் தம்மை இணைத்துகொண்ட பிற்பாடு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் குறைந்து செல்லும் போக்கே காணப்படுபின்றது. ஆதன் விளைவாகவே இங்குள்ள கட்சிகளுக்கு வேட்பாளர் பற்றாக்குறையும் ஏற்படுகின்றது. இப்பற்றாக்குறையினை எம்மை போன்ற புலம்பெயர்ந்தோர் கட்சியில் இணைந்து வெற்றிடத்தினை நிரப்பி வருகின்றோம். இலகுவில் பொறுப்பான பதவியினை கைப்பற்றகூடிய வாய்புக்களும் ஏற்பட்டுள்ளது. 

புலத்தில் உள்ள இணர்டாம் தலைமுறைத் தமிழர்களில் பலர் உயர் கல்வியே கற்கின்றனர். தம்மை இவர்கள் தொழிலில் நிரந்தரமாக தம்மை ஈடுபடுத்திய பிற்பாடு நாங்கள் தான் இவர்களை பார்த்து இவர்களும் தமிழர்கள் என்று சொல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை. தத்தமது உரிமைகளிற்காக போராடும் சக்திகள் தாம் வாழும் சொந்த இடங்களிலேயே தோன்றுவதே யதார்த்தமானதும் சாத்தியமானதும்.


சுவிற்சர்லாந்து தலைநகரில் இன்று நடைபெற்ற ஓன்று கூடலில் ஓர் ஆயிரக்கணக்காணவர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்ததினை காணக்கூடியதாக இருந்தது. இக் கூட்டத்தில் பேசிய ஓருவர் தமிழ் ஈழத்தினை ஆதரிப்பவர்கள் தமிழர்கள் எனவும் இதனை எதிர்ப்பவர்கள் சிங்களவர்கள் என இரண்டு தரப்பினராக பிரித்து தனது அரசியல் அறிவைப்புலப்படுத்தி உள்ளார். அதுமட்டுமல்லாது இங்கிலாந்தில் இரண்டு குழுக்களாக மே 18 கூட்டங்கள் இடம்பெறுவதாகவும் அவற்றில் ஓர் குழு தேசிய கொடி (புலிக்கொடி) இன்றி நடாத்துகின்றது எனவும் மற்றைய குழு இங்கிலாந்து அரசின் அனுமதிபெற்று தேசிய கொடிக்கான (புலிக்கொடி) அங்கீகாரத்தினை வாங்கி ஓன்றுகூடல் நடாத்தியதாக குறிப்பிட்டிருந்தார். இது தனியே புலிகள் இயக்கத்தின் கொடி மட்டுமே இது இலங்கை வாழ் தமிழர்களின் தேசிய கொடியாகாது. 

பேர்ணில் நடைபெற்ற மே 18 நிகழ்வு ஓர் தனி புலிப் பிரச்சாரக் கூட்டமாக அமைந்திருந்தது. இக்கூட்டத்தில் புலிகொடிகள் மட்டுமே பறக்கவிடப்பட்டிருந்தது. மே 18 இல் தனியே புலிகள் மட்டும் மடியவில்லை பல சாதாரண மக்களின் உயிர்களும் பறிக்கப்பட்டன என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் போலும். தனியே மக்களின் இழப்புக்கள் தமது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் ஓர் விடயமாகியுள்ளது. போர் நடந்த போதும் இவர்கள்; அதிக மக்களின் இழப்பே சர்வதேசத்தின் தலையீடு சாத்தியம் என்று கனவு கண்டவர்கள். 


மீண்டும் மீண்டும் நடைபெற்று முடிவடைந்த யுத்ததின் முடிவினை கொண்டு எவ்வித பாடங்களை கற்றுகொள்ளாமல் மேலும் உலகத்தின் மனிதாபிமானத்தின் சாட்சியாக உள்ள "ஐக்கிய நாடுகள்" சபைக்கு தமிழர் விடயம் எடுத்து செல்லப்பட வேண்டும் என துடிக்கின்றனர். அனைத்து ஐரோப்பிய அமெரிக்க பாராளுமன்றங்களில் தமிழர் பிரச்சினை பேசு பொருளாகவேண்டும் என சூழ் உரைக்கின்றனர். இதற்கு ஆதரமாக ஓரு சில இந்நாட்டு பாராளுமன்ற வாதிகளிற்கு மேடை கொடுத்து பேசவைத்து நாம் சர்வதேச அங்கீகாரத்திற்காக செயற்படுகின்றோம் என்பதனை காட்ட பெரு முனைப்பு எடுக்கின்றனர். இவர்களின் சர்வதேச காய் நகர்த்தலால் தமது இலங்கை பயணம் தடைப்பட்டு விடும் பலர் இக் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.ஊர்வலங்கள் கவனயீர்ப்பு போராட்டங்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் அனைத்து செய்திதாள்களின் பக்கங்களை நிரப்புவது மட்டமல்லாது யாருக்கு எதிராக போராட்டம் செய்கின்றோமோ அவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதாகவும் போராட்ட நியாத்தினை மக்கள் மனதில் பதியப்படுத்துவதாக அமையவேண்டும். 

வழமையாக வீதி ஓரங்களில் போடும் காப்புகடைகள் போன்று ஓர் புதிய விடயமாக மக்களால் அவதானிக்கபடுவதில்லை. இதே காப்புகடைகள் போன்று வருடாந்தம் ஐ.நா விற்கு முன்பாகவும் பேர்ண் பாராளுமன்ற முன்றலிலும் புலிகளால் நடாத்தப்படும்; திருவிழா கூட்டங்கள் பற்றிய செய்திகள் பத்திரிகையில் ஓர் பெட்டி செய்தியாக கூட வெளியாவதில்லை. ஆகவே இவ்வகை ஆரவாரத்தில் செலவழிக்கப்படும் பணங்கள் முள்ளிவாய்க்காளில் வாம்வாதரங்களையும் போரட்டத்தினால் அங்கங்களை இழந்து அங்கவீனமுற்றோர்களிற்கு கொடுத்து உதவ முன்வரலாம். 

புலத்திலுள்ள புலிகளும் புதிதாக தோன்றியுள்ள இரண்டாம் தலைமுறை அரசியல்வாதிகளும் முதலில் அரசியலை கற்றுகொள்ள வேண்டும். அரசியல் அறிவு தான் உங்கள் சிந்தனை பரப்பினை அதிகரிக்கும். இதன் மூலமே மக்களின் உரிமைகளை வென்ற எடுக்க கூடிய பாதையினை கண்டுகொள்ள முடியும். 


இரண்டாம் யுத்தம் தந்த கசப்பான அனுபவங்களின் விளைவே இன்றும் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளை ஏற்றுகொள்ளும் மனோ நிலையும் மற்றைய இனங்களுடன் விட்டுகொடுத்து வாழும் மனோ நிலையும் இணைவாக்கத்தினையும் கற்றுகொடுத்தது.

புலம்பெயர் வாழ் இரண்டாம் தலைமுறையினர் ஏற்கனவே எவ்வித ஆய்வுகளும் கணிப்புகளும் இன்றி தோற்றம் பெற்ற தேசியவாத கருத்துகளாலும் ஆயுதபோரட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகளை கருத்தில் கொண்டு தங்களின் தேடல்களை வலுப்படுத்துவதன் மூலமே நீங்கள் முள்ளிவாய்க்காளில் உயிர்நீத்த போராளிகளிற்கும் மக்களிற்கும் மே 18 இல் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.



க.சுதாகரன்
18.05.2009

Mittwoch, 20. April 2016

சம்மந்தனின் பிரபுத்துவ ஆணவமும் புலத்தில் தவிர்க்கபடவேண்டிய அரசியல் கலாச்சாரமும்

தமிழ் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் கைதிகளின் விடுதலைபற்றி பேச வந்த முன்னால் போராளிகளுடன் திமிராக நடந்து கொண்டதை வன்மையாக கண்டிக்கவேண்டும். அரசியல்வாதிகள் மக்காளால் மக்களிற்கு சேவை செய்வதற்காகவே தெரிவுசெய்ப்படுகின்றனர். ஏதோ தாமே மக்களின் எஐமானார்கள் போல் திமிராக அரசியல் அதிகாரத்தினை தமது பக்கபலமாக கொண்டு மக்களை ஏளனத்துடன் அல்லது பொருட்படுத்தாது நடக்கும் போக்கு அனைத்து தரப்பினராளும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். உருப்படியான ஜனநாயக முறையிலான கட்சியாக இருப்பின் கூட்டமைப்பு பாரபட்சமின்றி ஓழுங்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். தனது திமிர்த்தனமான நடவடிக்கையின் தவறினை சுயவிமர்சனம் செய்து மன்னிப்பு கோரல் வேண்டும். மேற் குறிப்பிட்ட நடவடிக்கையே ஓர் நேர்மையாக மக்களை நேசிக்கும் அரசியல்வாதியின் பண்பாக இருக்கமுடியும்.

இதேபோல் சுவிற்சர்லாந்திற்கு சுரேஸ் பிரமேச்சந்திரன் வந்திருந்த போது எனது நண்பர் அரசியல் விடயங்களை பேசத்துடங்கியவுடன். பிரமேச்சந்திரன் பேசியவிடயங்களை பொருட்படுத்ததாது இவர்கள் கூறி நான் என்ன கேட்பது என்ற தமிரில் நடந்து கொண்டதாக என்னிடம் தெரிவத்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. அரசியல்வாதிகள் என்றால் எல்லாம் தெரிந்த மகான்களான தம்மை நினைத்து கொள்ளுகின்றனர். மிதவாத அரசியிலில் ஈடுபடும் தனிநபர்களிற்கும் எவ்வித அறிவு சார்ந்த தகுதிலை இன்றி மக்கனை நேசிக்கும் பண்பு மட்டுமே போதுமானது. இதற்கு அடுத்தபடியாகவே மற்றவை எல்லாம்.

நேர்மையான அரசியல் வாதிகள் முதலில் கேட்கும் பண்பினை வளாத்து கொள்ளவேண்டும். ஓர் நிறுவனத்தினை முகாமுத்துவபடுத்தும் ஓர் சிறந்த தலைவருக்கும் இப்பண்பு அவசிமானதாகும். தம்மை தெரிவு செய்த மக்கள் தங்கள் குறைகளை முன்வைக்கும் பொழுது அவ்விடயங்களிற்கு நேரங்களை ஓதுக்கி கூர்ந்து குறைகளை கேட்டறிதல் வேண்டும். இவ்வகை அலட்சியப்போக்காக நடப்பது மக்களை இவர்கள் அடிமைகளாகவே கருதும் போக்;கினையையே வெளிப்படுத்துகின்றது.

சுவிற்சர்லாந்து பாரளுமன்ற தலைமைப்பொறுப்பினை  திருமதி சொம்மரூகா ஏற்றபோது மக்களிற்க்கு ஆற்றிய உரையில் தான் இன்றும் வழமைபோல் சுவிற்சர்லாந்து பாராளுமன்ற முன்றலில் ஓன்று கூடும் சந்தையிலேயே சமைலுக்கு தேவையான மரக்கறிகள் பழங்கள் வெண்ணெய் என்பவற்றினை கொள்வனவு செய்து வருகின்றேன் என தெரிவித்து இருந்தார். இதன் மூலம் நான் அன்றாடம் விவாசாயிகளையும் மக்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதாக கூறி பெருமைப்பட்டார். எமது இலங்கை இந்திய அரசியல்வாதிகள் சந்திக்க வரும் மக்களை உதாசீனம் செயது; தம்மை ஓர் அரசியல் பிரபுகளாக வெளிப்படுத்துகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு வான் ஊர்தியும் மற்றும் சட்டமன்றம் செல்லாது ஓய்வெடுக்க ஓர் மாளிகை ஜெயலலிதாவுக்கு




கரும்புத்தோட்டத்தில் சிமெந்து மூலம் அமைக்கபட்ட பிரத்தியேக பாதை ஸ்ராலின்க்கு









குறுகியகாலத்தில் அரசியலுக்கு வந்த சீமானிற்கு கூட்டங்களில் கறுப்பு கண்ணாடி அணிந்த தனி பாதுகாப்பு படை சொகுசு வாகனம்


இவற்றைப்பார்க்கும் போது சுவிற்சர்லாந்து பெரும்பாண்மை அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திற்கும் கூட்டங்களிற்கும் புகையிரதத்தினையே பயன்படுத்துகின்றது. இவர்கள் தம்மோடு ஓர் கூட்டத்தினையோ அல்லது பாதுகாப்பு படையினையோ அழைத்து செல்வதில்லை.

ஆனால் இன்று இந்நாட்டு அரசியிலுடன் தம்மை இணைத்துகொண்ட பல தமிழ் அரசியல் வாதிகள் தம்மை புகைப்படம் எடுத்தும் செல்வி எடுத்தும் பிரபல்யபடுத்தும் இந்திய இலங்கைபாணி மலிவு விளம்பரங்களை செய்து வருவது கவலைதருகின்றது. தம் சார்ந்த கட்சியின் கொள்கையுடன் உடன்பாடு கொள்ளாது தனியே வேட்பாளர்கள் ஆவதற்கு இந்நாட்டுகட்சிகளை பயன்படுத்திகொள்ளுகின்றனர். புலத்தில் வாழும் தமிழர்களும் இந்நாட்டு அரசியலில் அங்ஙத்துவம் பெறவேண்டும் என துடிக்கும் புலத்து தமிழ் அரசியல்வாதிகள். தமிழரே தமிழ்நாட்டை ஆழவேண்டும் என இனவாதம் கக்கும் சீமானுக்கு ஆதரவாக தமது முகநூலில் பதிவு இட்டுவருகின்றனர். இந்நாட்டு மக்களும் அரசியல் அங்கத்தும் தமது éர்வீக குடிகளுக்கு மட்டும் என்று கருதி இருந்தால் ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் எந்தவொரு தமிழனும் கட்சிகளில் அங்கம் கூட வகித்திருக்க முடியாது என்பதனை சிந்தித்து பார்க்கவேண்டும்.

தயவு செய்து புலத்தில் முளைத்திருக்கும் புதிய மிதவாத அரசியல்வாதிகள் இலங்கை இந்திய அரசியல் கலாச்சாரத்தினை மேடையாற்றாது தம்மை ஓர் மக்கள் பிரதிநிதியாக்குவதற்கு முன்தேவையான சமூக பிரங்ஞையை தன்னகத்தே வளர்த்து கொள்ள வேண்டும்.

Donnerstag, 14. April 2016

சுவிற்சர்லாந்தின் தமிழ் ஏடு பத்திரிகை ஆசிரியர் பாலா காலமானார்.

தமிழ் ஏடு பத்திரிகை  1992 இலிருந்து 1994 வரையும் வெளிவந்த ஓர் கட்சிசார்பற்ற சுயாதீன பத்திரிகையின் ஆசிரியர். இவர் தனது பதிவுகளை தீமணி என்ற புனைப்பெயரிலேயே எழுதி வந்துள்ளார். இப்பத்திரிகை சுவிற்சர்லாந்து வாழ் மக்களின் வதிவிட விடயங்களையும் மற்றும் இலங்கை இந்திய அரசியல் கலாச்சார இலக்கிய பதிவுகளையும் தன்னகத்தில் கொண்டு வெளிவந்தது. வழமைபோல் இப்பத்திரிகையையும் சுவிற்சர்லாந்து விடுதலை புலிகளால் விற்பதற்கும் வாங்குவதற்கும் தடைகள் போடப்பட்டது மட்டுமன்றி இதற்கு எதிராக இன்னுமொரு பத்திரகையை புலிகள் தரப்பு கொண்டுவந்தது. வழமை போல் இப்பத்திரிகையும் நிதி, கூட்டு வேலை என பல காரணிகளினால் சாத்தியமற்று 1994 ல் நின்று போனது.
ஆனால் பாலா தனது சமூகபணியை தொடர்ந்தார். அகதி தஞ்ச கோரிக்கையாளர்களிற்கான சட்ட ஆலோசனைகளை சுவிற்சர்லாந்து சமூக நிறுவனங்களுடன் இணைந்து இலவசமாக வழங்கி வந்துள்ளார். அதன் பிற்பாடு இணையபத்திரிகைகள் துளிர்விட்ட பொழுது «ஈழஅணல்»; என்ற இணைய சஞசிகையை கொண்டு வந்துள்ளார். புலிகளின் ஆயுத போராட்டம் முள்ளி வாய்காளில் முடக்கப்பட்ட பின்னர் இவரும் மக்களை இத்துயரில் இருந்து வடுவிக்கவேண்டும் என ஆர்வப்பட்ட ஓர் மனிதன்.

இவரின் இழப்பு இச்சமூகத்திற்கு தெரியாமல் போனது எனக்கு ஆச்சரியத்தினையும் கவலையும் கொடுத்துள்ளது. இவ்வகையில் இந்நாட்டில் வாழும் பல தமிழர்களின் இருப்புக்கு அத்திவாரம் இட்ட சமூகப்போராளிகள் பலர் எவ்வித பதிவு இன்றி காணாமல் போயுள்ளனர். பாலா தன்னை சுவிற்சர்லாந்தில் முதலில் பதிவு செய்த தமிழ் பத்திரிகையாளன் என தன்னை அறிமுகப்படுத்துவிதில் என்றும் பெருமைகொள்ளுவார்.

இவரின் இழப்பு சுவிற்சர்லாந்து வாழ்தமிழர்களின் ஓர் வரலாற்றின் அத்திவாரத்தின் இழப்பாக கருதமுடிகின்றது. இவரின் செயற்பாடுகள் இன்று மொளனித்ததாலும். அவருடன் இணைந்து வலம்வந்தவர்கள் அவரைப்பற்றி நினைவு கூறுவது அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

Sonntag, 20. März 2016

அகவிருப்பங்களும் கருத்துரிமை மறுப்பும்



ஓரு கூர் வாளின் நிழலில் என்ற தமிழனியின் போராட்ட அனுபவபகிர்வு நூல் பற்றி கடந்த 2 நாட்களாக முகநூலில் இரு வேறுபட்ட அணிகளின் வாதப்பிரதிவாதங்கள் முன்வைத்து  ஆக்கிரமித்துள்ளனர். 
ஓரு தரப்பு இடைச்செருகள் நடந்திருக்கலாம் எனவும் மற்றைய தரப்பு தமிழினியுடனான  இறுதிக்ககலங்களில் இருந்த தொடர்ரின் அடிப்படையில்  ஆதாரத்துடன் அந்நூலில் பதிவுசெய்த கருத்துடனே தமிழினி இறுதியில் இருந்தார் என தெரிவப்பது மட்டுமல்லாது தமது தரப்பில் தமிழினியுடன் உரையாடல் ஆதாரத்துடன் பேட்டிகளையும் பதிவுகளையும் ஆதாரப்படுத்தியுள்ளனர்.

பெரும்பாண்மையாக இடைச்செருகள் நடந்திருக்கலாம் என்று கூறும் தரப்பு தமிழினி தலைமைபற்றியும் இயக்கத்தின் அரசியல் முடிவுகள் பற்றிய விமர்சனங்களை அவர் முன்வைத்திருக்கமாட்டார் என மறுக்கின்றது.
தமிழினி விமர்சனத்துடனே தனது போராட்ட வாழ்வினை எதிர்கால சந்ததியின் நன்மை கருதி வெளியிட்டுள்ளார் என தமது உறுதியான கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளில் இறுதிப்போர்வரை இருந்தவர்கள் தமது தலைமைபற்றியும் போராட்டம் பற்றியும் ஓர் விமர்சன கண்ணோட்டத்துடன் பார்க்க முனையும் செயலே ஓர் ஆரோக்கியமான போக்கு. புலத்தில் வேலைசெய்த புலி ஆதரவாளர்களிற்கும் கண்மூடித்தனமான விசுவாசிகளிற்கும் தமிழனியின் விமர்சனம் கசப்பானதே. ஆனால் தமிழ் மக்களின் போராட்டத்தினை விமர்சனக் கண்ணோட்டத்தினுடாக பார்க்கும் தரப்பினர் தமிழமக்களின் உரிமைபோரட்டத்தினை சரியான பாதை ஊடக எதிர்காலத்தில் வழிநடத்துவதற்கு உதவும்; என்று கருதுகின்றனர்.
துரோகிகள் ஓத்தோடிகள் அரசாங்க ஆதரவாளர்கள் புலி எதிர்ப்பாளர்கள் என வகைப்படுத்தி கருத்து சுதந்திரத்திதை குரல்வழையில் நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபடாது. மேலும் இவ்வகையான சுயசரிதைகளே நடைபெற்ற உண்மை நிலைமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்.
விடுதலை புலிகளை கண்மூடித்தனமாக ஆதரித்தவர்களும் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் புலிகளின் அரசியலிற்கு முண்டு கொடுப்பவர்களின்; அகவிருப்பத்திற்கு வெளியீட்டாளர்களின் அட்டைப்பட குழறுபடிகள் வழிவகுத்துள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவரின் அரசியலை விமர்சிப்பது ஓர் பெரிய குற்றமாகவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதுவது இவர்களின் குறுகிய அரசியல் பார்வையே மீண்.டும் உறுதுpப்படுத்துகின்றது.
சயந்தன் தமழினி தன்னுடன் முகநூலின் உட்தகவல் பெட்டியில் நடைபெற்ற உரையாடலையும் காரணம் காட்டி அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்ட போன்று விடுலைப்புலிகளைபற்றுpயும் போராட்டம் பற்றியும் தன்னகத்தில விமர்;சனங்களை வைத்திருக்;கின்றார் என்பதனை தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோன்று அ.இராமசாமியும் மிக தெளிவாக தனக்கும் தமிழினியுடன் இடம்பெற்ற உரையாடலை காரணப்படுத்தி தமிழினியின் மனநிலையை தெளிவுபடுத்தியுள்ளார். என்னைப்பொறுத்த வரையில் இவர்களுடன் கருத்துக்களிற்கு பிற்பாடு இச்சந்தேகம் முற்றுபெற்றுள்ளது.

ஆனால் மேலும் சிலர் எப்படியாவது தமிழினி இப்படி எழுதியிருக்கமாட்டார் அல்லது எழுதியிருக்க கூடாது என்ற தமது அகவிருப்பங்களை நூலின் அட்டை சர்ச்சை மூலம் சாதிக்க முயலுகின்றனர். மேலும் ஓர் படிமேல் சென்று இன்னமும் தமது அனுபவ பதிவினை முன்iவாக்காத போராளிகளிற்கு ஓர் கட்டுப்பாட்டினை திணக்கமுயலுகின்றனர். ஓடுக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு இவரின் நூல் எவற்றை எடுத்து கூறுகின்றது என புலிகளுக்கு புலத்தில் பொறுப்பாக இருந்தவர் தனது கேள்வியை பதிவிடுகின்றார். வரலாற்று அனுபவங்களும் வேறுபட்ட பார்வைகளுமே நடைபெற்ற போராட்டத்தினை புடம்போட்டு பார்க்க உதவும் என்ற விடயம் இவர்களிற்கு புரயாமல் போனது ஆச்சரியமற்றதொன்றாகும்.

சந்தேகப்படல் வேண்டியது ஓர் அவசியமானது. எமது அகவிருப்பத்திற்கு அப்பால் ஓரு சில விடயங்கள் கசப்பாக இருப்பினும் ஏற்று கொள்ளல் வேண்டும்.

தமிழீழ விடுதலை போராட்;ட இயக்கங்கள் கடந்த காலத்தில் ஓரு நபரை துரோகிபட்டம் சூட்டுவதற்கு மூன்று மலிவான விவாதங்களை முன்வைப்பர். 1. பெண்தொடர்பு 2. நிதிமோசடி 3. காட்டிக்கொடுப்பு. இதே போன்று புலி எதிர்ப்பு அரசசார்பு ஓத்தோடிகள் என்ற சொற்கள் மூலம் முத்திரை குத்த முயலுகின்றது.

எல்லோருடனும் அனைத்து கருத்துகளுடனும் உடனபடமுடியாது. ஆனால் உடன்பட கூடிய பல விடயங்களுடன் கைகோர்த்து வேலைசெய்யமுடியும் என்பதனை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.
மேலும் இவ்வாறான போராட்த்தில் ஈடுபட்ட போராளிகள் தமது அனுபவ பகிர்வை வெளிப்படத்துவது மூலம் இலங்கைவாழ் தமிழ் சமுகம் தமது உரிமைபோராட்டங்களை சரியான பாதை ஊடாக வழிநடத்தி செல்ல உதவும் என நம்புகின்றேன்.

G.Suthakaran / 21.03.2016

Dienstag, 15. März 2016

புலம்பெயர் தமிழர்களும் பாராளுமன்ற அரசியலும்


இரண்டாவது தலைமுறை

புலத்தில் வாழும் இரண்டாவது தலைமுறை தமிழர்கள் பலர் தாம் வாழும் நாட்டு அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது. இவ் எண்ணம் ஆனது  தவறு அன்று. ஆனால் இவ்வகையில் அரசியலில் குதித்திருக்கும் பலரின் அரசியல் பின்னணியே பிரச்சினையாக உள்ளது. சுவிற்சர்லாந்தில் பெரும்பாண்மையான இளையோர் சோசலிச ஜனநாயக கட்சிக்குள்ளேயே தம்மை இணைத்துள்ளனர். இந்நாட்டில் வாழும் குடியேறிகளின் உரிமைகளிற்காகவும் மற்றும் மனிதாபிமானம் கருத்து சுதந்திரம் பெண்விடுதலை ஓரினபாலியல் வாதிகளின் உரிமை மற்றும் ஓர் கலப்பு பொருளாதார முறையை ஆதரிக்கும் இடதுசாரி நோக்கங்களை கொண்ட கட்சியாகும்.

புலம்பெயர் தமிழ் ஈழ ஆதரவாளர்களின் கனவு

இக்கட்சியில் உட்புகுந்துள்ள பல இளையதலை முறைத்தமிழர்களும் முதல் தலைமுறைத்தமிழர்களும் கடந்த காலத்தில் தமிழ் ஈழம் என்ற நோக்கத்துடன் தமிழ் ஈழம் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவாக செயற்பட்டோரே அதிகம். 2009 ஆம் ஆண்டு போராட்டம் முள்ளிவாய்க்களில் முடக்கபட்டபின்னர் இவர்கள் இந்நாடுகளில் தீவிரமாக புலத்து அரசியலில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். இவர்களை புலத்து அரசியலில் ஈடுபடுமாறு ஊக்குவிப்பது பல துருவங்களாக புலத்தில் சிதறிப்போன பழைய தமிழ் ஈழம் விடுதலைப்புலிகளின் அமைப்புகளே. இவர்களின் கனவு புலம்பெயர்ந்து வாழ்ந்த யூதர்கள் புலத்தில் தமது அரசியல் பலத்தின் மூலம் இஸ்ரேல் என்ற நாட்டை எவ்வாறு உருவாக்கினார்களோ அதேபோல் தமது புலம்பெயர்ந்த நாட்டு அரசியலில் நுளைவது மூலம் தமிழீழம் என்ற நாட்டை உருவாக்கலாம் என கனவு காணுகின்றனர்.

வலதுசாரி அரசியலும் கலாச்சார காவலரும்

கடந்தகாலங்களில் வலதுசாரி அரசியல் எண்ணங்களையும் அதிதீவிர கலச்சார இறுக்கத்தினையும் தீவிர மத அடிப்படை வாதிகளாக இருந்துவந்துள்ளனர். எவ்வித சுயவிமர்சனமும் இன்றி ஓர் முற்போக்கான கலச்சார விழுமியங்களை ஆதரிக்கும் கட்சிக்குள் தம்மளவில் எவ்வித மாற்றங்களை ஏற்படுத்தாது தம்மை இணைத்துள்ளனர். ஓரினபாலியலையோ  ஓரினபால் திருமணங்களையோ கலப்பு திருமணங்களையோ இவர்கள் அங்கீகரிப்பார்களா? இன்றும் தமிழ் கலாச்சாரம் என்று கூறி ஓர் அதிதீவிர கலாச்சாரகாவலர்களாகவும் மதகாவலர்களாகவே வலம்வருகின்றனர்.
அரசியல் பிரவேசத்திற்கு பின்னராவது தம்மை அரசியல் சமூக விடயங்களை கற்றுகொள்வதில் அல்லது தேடலில் ஈடுபடுத்துகின்றனரா என்ற கேள்வி பலரிடம் எழுகின்றது. புலத்தில் உள்ள பல பெற்றோர் தமிழ் கல்வியாகட்டும் கலைகளாகட்டும் இவற்றை தமது பிள்ளைகளிடம் திணித்தே வழர்த்துள்ளனர். இதே போக்கு இன்று தமது பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுத்தி பிரபல்யம் ஆக்கலாம் என கனவு காண வைக்கின்றது. இவை எல்லவற்றிற்கும் உறுதுணையாக தமிழ் ஈழ விடுதலைபுலகளுக்கு ஆதரவழித்து வந்த இந்த பல ஓருபக்கபார்வை கொண்ட தமிழ் ஊடகங்கள் இவர்களை பிரமுகர்கள் ஆக்கும் பணியை செவ்வண செய்து வருகின்றது.

இலங்கை வாழ் தமிழர்களின் அபிலாசைகள்


உதைபந்தாட்ட அணிக்கு காலம் காலமாக ஆதரித்துவந்தவர்கள் இறுதி போட்டியின் போது ஓரு கோலையாவது போடாது தோற்று போன மனநிலையில் பல புலத்து தமிழர்கள் உள்ளனர். இதனால் இனியோர் போட்டி நிகழ்ச்சியினை ஓழுங்குசெய்து எப்படியாவது வெல்லவேண்டும் என்ற மனப்பாண்மையுடன் காணப்படுகின்றனர். இவர்கள்; இவ் எண்ணத்தினை விளையாட்டு போட்டியில் மட்டும் செலுத்தினால் குற்றம் ஏதும் இல்லை. இது ஓர் மக்களின் விடுதலைக்காண போரட்டம். விடுதலையை வேண்டி தமது சொந்த மண்ணில் வாழ்ந்து வரும் மக்களின் அபிலாசைகளே முக்கியமானது. புலத்தில் சுகபோக வாழ்கையை வாழ்ந்துவரும் எமது விருப்பமும் நோக்கமும் இலக்கும் அவர்களது அபிலாசைகள் பற்றி நாம் முடிவெடுப்பது அபத்தமானதாகும்.

இலங்கை வாழ் தமிழ்மக்களின் போராட்டங்களுக்கு எமது ஆதரவினையும் சொலிடாரிட்டியை வழங்குவதே புலத்தில் வாழும் தமிழர்களின் நோக்காக இருக்கமுடியும்.

வேண்டுகோள்

ஆரசியலில் ஈடுபட்டுள்ள முதலாம் தலைமுறை அரசியல் வாதிகளிற்கான எனது வேண்டு கோள் நீங்கள் வேட்பாளராக நிற்கும் முன் உங்களது இந்நாட்டு மொழி தறமையை வளர்த்து கொள்ளுங்கள். மக்கள் தொடர்பு மற்றும் பல சட்ட அமுலாக்க மசோதாவை புரிந்து விளங்கிகொண்டு உங்கள் தரப்பு விவாதங்களை முன்வைக்க உதவும்.

புலத்தில் புதிதாக உருவடுத்திருக்கும் இணர்டாவது தலைமுறை அரசியல்வாதிகளை நான் வேண்டிக்கொள்வது யாதெனில் நீங்கள் வாழும் நாட்டு அரசியலில் ஈடுபடுங்கள். ஆந்நாடுகளில் வாழும் அனைத்து மக்களிற்காக அரசியலில் ஈடுபடுங்கள். தனியே தமிழ்மக்களை பிரதிநிதித்துவ படுத்துவதை மாத்திரம் அரசியல் நோக்கமாக கொண்டு வேட்பாளர் ஆகாதீர்கள்;. முதலில் இந்நாட்டு கலாச்சாரங்கள் மக்களின் தேவை போன்றவற்றை சரி வர புரிந்து கொள்ளுங்கள். மக்களின் அனைத்து நீதியான போராட்டங்களுடன் உங்களை இணைத்து கொள்ளுங்கள். ஆரசியலை கற்று கொள்ளுங்கள் தேடுதலில் ஈடுபடுங்கள். பிள்ளையார் தந்தையையும் தாயையும் வலம்வந்து உலகத்தினையே வலம் வந்ததாக எண்ணி பெருமிதமடைந்தது போல் அல்லாது. தனித்தமிழ் ஊடகங்களில் உங்களின் பெயர்களையும் அறிக்கைகளை வெளியிட்டு பெருமையடைதீர்கள். இந்நடவடிக்கை உங்களிற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஓர் பிரபல்யத்தினை தரும். ஆனால் நீங்கள் பிரதிநிதித்துவப்போகும் ஏனை மக்களிற்கு என்ன செய்யப்போகின்றீர்கள்? உங்களுடைய அரசியல் நிலைப்பாடு என்ன?

சுவிற்சர்லாந்தை பொருத்தவரையில் நாடு éராகவும் குடியுரிமை பெற்ற தமிழர்கள் அண்ணளவாக 25000 பேர்கள். இந்ந 25000 தமிழர்கள் 26 மாநிலங்களில் சிதறி வாழ்கின்றனர். ஓர் மாநிலத்தில் அண்ணளவாக 1000 அல்லது 2000 தமிழர்களே இருப்பார்கள். இவர்களிற்கு ஓர் சுவிற்சர்லாந்து பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியமா? நீங்கள் நடத்தும் அரசியல் இந்நாட்டு éர்விக குடிகளிற்கும் அனைத்து குடியேற்றவாதிகளிற்கானதாகவே இருத்தல் வேண்டும். சிறப்பு திறமையற்ற அரசியல் வாதிகள் பத்தில் ஓன்றாக இருக்க முடியுமே தவிர எதையும் சாதிக்கமுடியாது. இவ்வாறு தகமையற்ற அரசியல் வாதிகளால் அம்மக்களிற்கு எவ்வித பலனுமில்லை. இவ்வகையான அரசியல் அற்ற வெற்று வேட்டிஅரசியல்வாதிகளினாலே பல நாடுகளில் மக்கள் எவ்வித பயனுமின்றி தவிக்கின்றனர்.

உங்களுக்கு கிடைத்த இந்த சந்தர்பங்களை பயன்படுத்தி இன்று ஓங்கி வளர்ந்துவரும் இனவாதத்திற்கும் வலதுதீவிரவாத அரசியலிற்கு எதிராகவும் செயற்படுங்கள். உங்கள் செயற்பாடுகள் பெரும்பாண்மை மக்களை உங்கள் கருத்துகளிற்கு ஆதரவாக அணிதிரட்டுங்கள். மாறாக உங்கள் குறும் நோக்கங்களின் செயற்பாட்டால் இனவெறிக்கும் அதிதீவர வலது சாரி அரசியலிற்கு வித்திடாதீர்கள்.

Freitag, 30. Oktober 2015

ருசிகண்ட பூனையும் சுவிற்சர்லாந்து தமிழர் நலன்புரி சங்கம் சொலத்தூண் (Tamil Welfare Association Solothurn)

புலிகள் கொடிகட்டி பறந்த நாட்களில் புலம்பெயர் நாடுகளில் எந்த வொரு சுயாதின அமைப்புகளையும் விட்டுவைக்கவில்லை. கோயில்கள் பத்திரிகைகள் கலை கலாச்சார மற்றும் விளையாட்டுதுறை எதனையும் விட்டுவைக்காது தமது பினாமி அமைப்பாக்கி தன்னகப்படுத்தி கொண்டனர். இவ்வமைப்புகளினால் சேகரிக்கப்படும் அனைத்து நிதியினையும் போராட்ட நிதியென அபகரித்து கொண்டனர். மேலும் ஓர் படி மேலாக தமது பினாமிகளை கொண்டு பல நிறுவனங்களையும் முதலீட்டு நிறுவனங்களையம் நடாத்திவந்தனர். இவ்விடயங்களை புலம்பெயர் வாழும் எந்த தமிழரும் நன்கு அறிவர்.

முள்ளிவாய்காலிற்குள் போரட்டம் முடக்கப்பட்டபின்னர் பல பினாமிகள் நிறுவனங்களை தமேக்கே சொந்தமாக்கி கொண்டனர். சேகரித்த பெரும்தொகை தனிநபர்களிடமே சொந்தமான பல ஆதாரங்களும் உள்ளன. இவ்வகையில் பொது அமைப்பினால் பெறப்பட்ட பெருந்தொகை நிதியில் தங்கி இருந்த புலத்து புலிகள். இன்றும் இந்நிறுவனங்களை தனித்து இயங்கவிடமால் இன்றும் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து தமது பினாமிகளை கொண்டு வருமானங்களை கபழிகரம் செய்ய பல குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றனர்.

இவற்றுக்கு சான்று பகிரும் வகையில் கடந்த செப்ரம்பர் மாதம் சுவிற்சர்லாந்து நலன்புரி சங்கம் Solothurn ஓர் பொது குழுவினை ஏற்பாடு செய்திருந்தது. சங்த்தினை ஓர் சுயாதினகரமான அமைப்பைமாற்றுவதற்கான அடிப்படையில் சந்திப்பிற்கான அழைப்பு விடுவிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது விடுதலைப்புலிகளின் சுவிற்சர்லாந்து கிளையில் செயற்பட்டு வருபவர்கள் ஓருசிலரும் இன்னும் பல ஆதரவாளர்களும் இணைந்து தமக்கு கீழ் அணிதிரளுங்கள் நாம் ஓர் புதிய நிர்வாகத்தினை நிறுவுவோம் என கோரிக்கை விடுத்திருந்தது. சந்திப்பிற்கான அழைப்பை விடுத்திருந்த பெரும்பான்மையான பழைய நிர்வாக சபை உறுப்பினர்களும் இவர்களை ஆதரிப்போரும் மற்றும் இச்சங்கத்தினை புலிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுப்பிக்க விரும்பியோர்களும் தனியே சந்திப்பினை ஓரே மண்டபத்தில் மேற்கொண்டனர். இதன் போது இருதரப்பினர்களாலும் வாக்குவாதங்கள்  இடம்பெற்ற மண்டபத்தினையே அதிரவைத்தது. பாதுகாவலிற்காக தனியார் பாதுகாப்பு சேவையாளர்களும் ஒன்றுகுவிக்கபட்டிருந்தனர். இதன் போது இரண்டு தரப்பினரும் இரண்டு புதிய செயற்குழுவினை தெரிவுசெய்தனர்.

சுயாதீனத்தினை விரும்புவர்கள் தமது சங்கத்தின் யாப்பிற்கு இணங்க தமது சங்த்தினை பதிவு செய்து கொண்டனர். இதனை கேள்விப்பட்ட மற்றைய தரப்பினரும் அதே சங்கத்தினை தமிழ் பெயரில் பதிந்துகொண்டனர். ஏன் இந்த சங்கத்தின் மேல் இவ்வளவு கரிசனை என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். நலன்புரி சங்கத்தினரே கடந்தகாலங்களில் பாரிய போட்டி சுவிற்சர்லாந்து தழுவிய நிகழ்ச்சியான நாட்டிய மயில் இசைக்குயில் போன்ற நிகழ்ச்சியை நடாத்தி வந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கிடைத்த அனைத்து வருமானங்களும் புலத்து புலிகளின் வேலைத்திட்டங்களிற்காக கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

இச்சங்கம் சுயாதீனமாக செயற்பட்டால் இவ்வகையான நிகழ்ச்சி மூலமாக கிடைக்கப்படும் பணத்தினை சங்கமே நிர்வகிக்கும் தமது கயான காலியாகிவிடும் என்ற உள்நோக்கமே இவ்வகையில் சங்கத்தின் பதிவிற்கு எதிரான எதிர்பதிவினை செய்து சுயாதீனமானவர்களை செயற்படவிடாமல் தடுக்கம் நடவடிக்கையாகும்.

சுவிற்சர்லாந்தில் இயங்கிவந்த புலிகள் கடந்த இறுதியுத்தத்தின் போது ஓவ்வொரு தமிழர்களிடம் இருந்து ஓரு இலட்சம் சுவிஶ் பிராங்குகளை சேகரித்தனர். யுத்த முடிவிற்கு பின்னர் தாம்  வாங்கிய ஓரு இலட்சம் வங்கி கடனை அடைக்கமுடியாது பல தமிழர்கள் இன்னலுக்கு உள்ளனர்.
யுத்த முடிவிற்கு பின்னர் பணத்தினை திருப்பி கொடுக்குமாறு புலி அமைப்பாளர்களிடம் கோரியிருந்தனர்.

ஆனால் புலி அமைப்பாளர்கள் நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்பட்ட நாட்டியமயில் அல்லது இசைக்குயில் வருமானத்தினை பெற்று கடனை அடைப்பதாக பிரச்சாரப்படுத்தி கொண்டு தமது தனிப்பட்ட அனுதாபிகளிற்கு மட்டும் பணத்தினை திருப்பி கொடுத்தனர். சமமான முறையில் பாதிக்கப்பட்ட முறையில் பகிர்ந்தளிக்க படவில்லை.

இச்சம்பவங்களினால் அதிருப்தி அடைந்ததின் விளைவாகவே பெரம்பான்மையான உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்ற அவசியத்தின் வெளிப்பாடே பொது குழுவின் சந்திப்பு நடைபெற்றது.

சுயாதீனத்தினை விரும்புவோர்  29.09.2015 அன்று Tamil Welfare Association Solothurn. எனபதிவு செய்து கொண்டனர்.  புலத்து புலிகளின் ஆதரவோடு பதிவு செய்யப்பட்ட சங்கம் Tamilar (ரமிலர்) Nalanpuri Association Solothurn என 13.10.2015 அன்று பதிவு செய்துள்ளனர். சங்கத்தின் நோக்கமும் ஈ அடிச்சான் கொப்பி போல் அதே வசனத்துடன் எழுதப்பட்டுள்ளது.

இன்று தமது அமைப்புக்களை அரசியல் கட்சி சார்பற்ற சுயாதீன அமைப்பாக வைத்து கொள்ளவே  பெரும்பாண்மையானவர்கள் விரும்புகின்றனர்.

இனிமேலும் எவ்வித வேலைத்திட்டங்கள் அற்று செயற்படும் புலி அமைப்பினரை மக்கள் நிரகரிக்கவேண்டும். இவர்களின் முக்கிய நோக்கம் பணம் சேகரப்பது மட்டுமே. புலத்தில் உள்ள புலிகளினால் முடக்கப்பட்ட பெரும் தொகையான பணம் யுத்ததினால் வாழ்வாதரங்ஙகளை இழந்த மக்களிற்கும் மேலும் பாதிக்கப்பட்ட அல்லது அங்கவீனமுற்ற போரளிகளிற்கு உதவுவதற்கு போதுமானது. ஆனால் கசப்பான உண்மையாதெனில் எந்த ஓரு புலம் பெயர் நாட்டிலும் செயற்பட்ட புலிகளும் தம்மால் சேகித்த அல்லது முதலீட்டால் பெறப்பட்ட வருமானங்கள் சரியான முறையில் பாதிக்கப்பட்டவர்களிற்கு கொடுக்கபடவில்லை மாறாக இப்பணங்கள் அந்தந்த நாடுகில் உறைந்த போனது.

ஆனால் மக்கள் விழிப்படைந்துவிட்டனர் அனைத்து நலன் விரும்பிகளும் புலத்து புலிகளின் இவ்வகையான சனநாயகவிரோதமான நடவடிக்கையை கண்டித்து அம்பலப்படுத்தல் வேண்டும். இரண்டு சங்க பதிவின் பத்திரங்களும் இணைக்கப்பட்டுள்ளது.


அனைத்து சங்கங்களையும் அரசியல் தலையீடு அற்று சுயாதீனமாக செயற்பட வழிவகுக்க வேண்டும்.
31.10.2015